Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM
ராமநாதபுரம் அரண்மனை முன் நேற்று முன்தினம் இரவு எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளருமான அ.அன்வர் ராஜா பேசியதாவது:
தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை முதல்வர் பழனிசாமி கொண்டு வந்துள்ளார். இதுபோன்ற ஆயிரக்கணக்கான திட்டங்களை கொண்டு வந்து சிறந்த முதல்வராக திகழ்கிறார்.
மருத்துவப் படிப்புக்காக நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. இதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்தார். எனினும், மத்திய அரசு நீட் தேர்வை அமல்படுத்தி விட்டது. இதை உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்து உத்தரவிட்டது.
அப்படியிருக்கும்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவர் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதியை அளிக்கிறார். அப்படி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால், நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இதுபோன்றுதான் கடந்த மக்களவைதேர்தலின்போது நகைக் கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து என பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தார்.
நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது. அதனால்தான் அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை முதல்வர் பழனிசாமி கொண்டு வந்துள்ளார் என்றார். கூட்டத்தில், மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் எம்.மணிகண்டன், என்.சதன் பிரபாகர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT