Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும்: மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உறுதி

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே மாரிக்கவுண்டன்பாளையத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.படம்: எம்.மூர்த்தி

சென்னை/கரூர்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் நேற்று உறுதி செய்தனர்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய 10 கட்சிகள் உள்ளன. கடந்த 2016 பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்தத் தேர்தலிலும் அதே தொகுதிகளை கேட்கிறது.

ஆனால், கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதாலும், குறைந்தது 170 தொகுதிகளில் போட்டியிட திமுக விரும்புவதாலும் காங்கிரஸுக்கு 30 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்ததுள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரியிலும் திமுக – காங்.கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்தார். அதில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் நேற்று கூறியதாவது: தமிழக மக்கள் ஒருபோதும் பாஜகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மதச்சார்பற்ற அரசைத்தான் தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணி இப்போதும் தொடர்கிறது. அதில் எந்த சந்தேமும் வேண்டாம். திமுக கூட்டணியில் கமல்ஹாசன் வரவேண்டும என்பது காங்கிரஸ் தலைவர்களின் தனிப்பட்ட கருத்து. அதுகுறித்து நான் சொல்ல எதுவும் இல்லை.

கூட்டணி கட்சித் தலைவர்களிடம் பேச்சு நடந்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக அறிவிக்கப்படும். சிறையில் இருந்து சசிகலா வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும் என்பது அவர்களின் உள்கட்சி பிரச்சினை. அதில் தலையிட விரும்பவில்லை. சசிகலா உடல்நலம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

இதேபோன்று, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தபோது, ‘‘புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் இடையே சில பிரச்சினைகள் எழுந்துள்ளதே?’’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ராகுல் காந்தி பதிலளிக்கையில், ‘‘தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரசுக்கு நல்ல உறவு உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் வைத்துஉள்ளோம். தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. முதல்வர் வேட்பாளராக மு.க. ஸ்டாலினை ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x