Last Updated : 24 Nov, 2015 07:14 PM

 

Published : 24 Nov 2015 07:14 PM
Last Updated : 24 Nov 2015 07:14 PM

திருவாரூர் புதிய பேருந்து நிலைய பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

போக்குவரத்து நெரிசலில் இருந்து திருவாரூர் மக்கள் விடுபடுவதற்காக தொடங்கப்பட்ட புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களின் மையப் பகுதியாகவும், வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு தென்தமிழகம் மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடந்து செல்ல கூடிய பகுதியாக விளங்குவது திருவாரூர்.

இந்த நகரில் உள்ள பேருந்து நிலையத்தின் வழியாகவே மயிலாடுதுறைக்குச் செல்ல வேண்டும். எனவே, பேருந்து நிலையத்தின் மேற்குப் பகுதி வாகன போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நாகை, மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கும், சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஆனால், பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இங்கு ஒரே நேரத்தில் 20 பேருந்துகளை மட்டுமே நிறுத்த முடியும்.

இதனால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக கடந்த 2007-ல் திருவாரூர் நகருக்கு வெளியே விளமல் கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அப்போதைய திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக 11.89 ஏக்கர் நன்செய் நிலத்தை திருவாரூர் நகராட்சிக்கு ஒப்படைக்க 1.9.2007-ல் அரசாணை 149-ல் வெளியிடப்பட்டது. இதற்காக திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

பின்னர் ரூ.6 கோடி மதிப்பீட்டில் திருவாருர் தஞ்சை சாலையில் விளமல் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணியை கடந்த 6.3 2013-ல் தமிழக அரசு தொடங்கியது. இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பணியில் இதுவரை 50 சதவீதம் கூட நிறைவடையவி்ல்லை. கடந்த திமுக ஆட்சி அறிவித்த திட்டம் என்பதால் ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்தில் 60 கடைகளுக்கான சிமென்ட் பூச்சு வேலை மட்டும் நிறைவடைந்துள்ளது. வயல் பகுதியை பேருந்து நிலையமாக மாற்றுவதால் அதகளவு மண்ணைக் கொட்டி பள்ளங்களை நிரப்பி உயர்த்த வேண்டியுள்ளது. இந்த பணிகள் மந்த நிலையிலேயே நடைபெற்று வருகிறது. பேருந்துகள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. கழிவறை வசதி, பயணிகள் காத்திருக்கும் பகுதிகள், குடிநீர், மின்சார வசதி, சாலை வசதி உள்ளிட்ட எந்த பணிகளும் இன்னும் நிறைவடையவில்லை.

போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேளையில், இத்திட்டத்துக்கான போதிய நிதியை ஒதுக்கீடு செய்து, திருவாரூர் புதிய பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே திருவாரூர் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x