Published : 21 Jun 2014 10:39 AM
Last Updated : 21 Jun 2014 10:39 AM
தமிழகத்தில் இரட்டை ரயில் பாதை மற்றும் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஆமை வேகத்தில் நடக்கின்றன.
தமிழகத்தில் அகல ரயில் பாதை அமைத்தல், இரட்டைப் பாதை அமைத்தல், புதிய பாதைக்கான சர்வே, ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நிதிப்பற்றாக்குறை, நிலம் கையகப்படுத்துதல், நீதிமன்ற வழக்குகள், இருப்புப் பாதை அமைப்பதற்கான கட்டுமானப் பொருட்கள் விரைவில் கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு ரயில் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன.
சென்னையில் இருந்து கோவை, எர்ணாகுளம், திருவனந் தபுரம், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி வரையிலான 943 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையில், 2 இடங்களில் மட்டும் இரட்டைப் பாதை பணி முடிவடையவில்லை.
தென்மேற்கு ரயில் பாதை என அழைக்கப்படும் இந்த மார்க்கத்தில் எர்ணாகுளம் காயங்குளம் வரையிலான 100 கிலோ மீட்டர் தூர இரட்டைப் பாதை பணியில் 30 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. திருவனந்தபுரம் கன்னியாகுமரி இடையே உள்ள 90 கிலோ மீட்டர் தூர இரட்டைப் பாதை பணிக்கான சர்வேதான் முடிந்திருக்கிறது.
சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி வரையிலான 742 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையில், இரட்டைப் பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.
தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டித் தரும் இந்த மார்க்கத்தில் இரட்டைப் பாதை பணியை துரிதப்படுத்த எம்.பி.க்களும், ரயில்வே அதிகாரிகளும், தமிழக அரசும் ஆர்வம் காட்டவில்லை என்று தென்மாவட்ட மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் 715 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமார் ரூ.2,552 கோடி செலவில் ரயில் திட்டப் பணிகள் நடக்கின்றன. இரட்டைப் பாதையைப் பொருத்தவரை சென்னையில் இருந்து செங்கல்பட்டுவரை இரட்டைப் பாதை உள்ளது. செங்கல்பட்டு முதல் விழுப்புரம்வரை 103 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.700 கோடியில் இரட்டைப் பாதை அமைக்கப்படுகிறது. 78 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணி முடிந்துள்ளது. 25 கிலோ மீட்டர் தூரத்தில் நடக்கும் பணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம்தான் முடிவடையும்.
விழுப்புரம் திண்டுக்கல் இடையே 278 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1,250 கோடி செல வில் இரட்டை ரயில்பாதை அமைக் கும் பணியை ஆர்.வி.என்.எல். நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இப்பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கை வருகிறது. போதிய நிதி ஒதுக்கவில்லை என்று ஆர்.வி.என்.எல். தரப்பு கூறுகிறது.
விழுப்புரம் திருச்சி இடையே உள்ள 180 கிலோ மீட்டர் தூரத்தில் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே இரட்டைப் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. திருச்சி திண்டுக்கல் இடையே 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு இப்போதுதான் பணி தொடங்கியுள்ளது.
அகலப் பாதை பணியைப் பொருத்தவரை காரைக்குடி திருவாரூர் இடையே மட்டும் அங்கொன்றும், இங்கொன்றுமாக பணி நடக்கிறது.
திருத்துறைப் பூண்டி அகஸ் தியம்பள்ளி, மதுரை போடி, செங்கோட்டை புனலூர் இடையே பணிகள் தொடங்கப்படவில்லை. முன்னுரிமை, அதிக போக்கு வரத்து, கூடுதல் தேவை ஆகிய வற்றைக் கருத்தில் கொண்டுதான் ரயில்வே நிர்வாகம் நிதியை ஒதுக்குகிறது.
அதனால்தான் இரட்டைப் பாதை பணி, அகல ரயில் பாதை பணிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை. திட்ட மிட்டபடி குறித்த காலத்துக்குள் முடிக்கவும் முடியவில்லை.
இவ்வாறு அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT