Published : 23 Jun 2014 11:11 AM
Last Updated : 23 Jun 2014 11:11 AM

சென்னை விமான நிலைய சுவரில் இருந்து கிரானைட் கற்கள் விழுந்து நொறுங்கியது: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

சென்னை விமான நிலையத்தின் சுவரில் இருந்து கிரானைட் கற்கள் விழுந்து நொறுங்கியது. இதனால் அச்சமடைந்த விமான நிலைய ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

சென்னை விமான நிலையத் தில் மேற்கூரை மற்றும் கிரானைட் கற்கள் உடைந்து விழுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு உள்நாட்டு விமான நிலையத்தில், பயணிகள் புறப்பாடு பகுதியில் உள்ள லிப்ட் அறையின் வெளிப்பக்க சுவரில் ஒட்டப்பட்டிருந்த கிரானைட் கற்கள் 20 அடி உயரத்தில் இருந்து பெயர்ந்து விழுந்தது. விழுந்த வேகத்தில் இந்தக் கற்கள் உடைந்து சிதறியது.

அப்போது, அங்கு பயணிகள் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால் கற்கள் விழுந்ததைப் பார்த்த, விமான நிலைய ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விமான நிலைய அதிகாரிகள் அவற்றை பார்வையிட்டனர். அதன் பின், ஆய்வுக்காக கிரானைட் கற்களின் துகள்களை எடுத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள் கிரானைட் கற்களை அப்புறப்படுத்தினர்.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இதே போன்று லிப்ட் சுவரில் பொருத் தப்பட்டு இருந்த கிரானைட் கற்கள் உடைந்து விழுந்தது. சென்னை விமான நிலையத்தில் 20-வது முறையாக விபத்து நடந்துள்ளது. மூன்றாவது முறையாக லிப்ட் சுவரில் இருந்து கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளது.

இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “கட்டுமானம் சரியில்லாத காரணத்தால், கிரானைட் கற்கள் உடைந்து விழுந்திருக்க வேண்டும். இதுகுறித்த முழுமையான விசாரணைக்கு பிறகே, உண்மை நிலவரம் தெரியவரும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x