Published : 25 Jan 2021 09:32 PM
Last Updated : 25 Jan 2021 09:32 PM
தமிழர்களுக்கோ, தமிழ் மொழிக்கோ பாதிப்பு ஏற்படும் போது அந்த பாதிப்பைக் களைய உடனடி நடவடிக்கை எடுப்பது அதிமுக அரசு என உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் உளுந்தூர்பேட்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு அதிமுக மாவட்டச் செயலாளரும், உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.குமரகுரு வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முககம் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மேடையின் கீழே அலங்கரிக்கப்பட்ட மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.பிரபு, அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மோகன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், ''தமிழகத்தின் நலனை அதிமுக அரசு ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத் தீவு பிரச்சனை உள்ளிட்ட வாழ்வாதாரப் பிரச்சனைகளை மீட்டெடுத்தது அதிமுக அரசு என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். ஸ்டாலின் தற்போது வேலேந்தி வேஷமிட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள்'' என்றார்.
இதையடுத்து முதல்வர் பழனிசாமி பேசுகையில், ''அறிஞர் முதல்வராக இருந்தபோது, தமிழகப் பள்ளிகளில் மும்மொழித் திட்டத்தை எதிர்த்து, தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெறும் எனவும், இந்தி மொழி அறவே நீக்கப்படும் எனவும் 23.01.1968-ல் தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும் எனச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அதேபோன்று 13-11-1986-ல் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோதும் இருமொழிக் கொள்கைத் திட்டத்திற்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோன்று ஜெயலலிதாவும் இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கக் கூடாது எனவும், திணித்தால் அந்த முயற்சியை முறியடிப்பேன் என்றார். தற்போதைய அதிமுக அரசும், மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தில் மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரு மொழிக் கொள்கைதான் என்பதில் உறுதியாக இருந்து, வரைவத் திட்டத்திலிருந்து நீக்கவும் வலியுறுத்தியுள்ளது. மொழிப்போர் தியாகியான கீழபழவூர் சின்னச்சாமிக்கும், சிதம்பரநாதனுக்கும் சிலை வைத்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
மேலும் தபால் துறைத் தேர்வைத் தமிழில் நடத்த உறுதி செய்தது.உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முதன்முறையாக தமிழில் பெற்றது. தமிழுர்களுக்கோ, தமிழ் மொழிக்கோ ஏதேனும் பாதிப்பு என்றால் அதனைக் களைய நடவடிக்கை எடுப்பதும், தமிழ்நாடு உருவான நாளான நவம்பர் 1-ம் தேதியை ஆண்டுதோறும் தமிழ்நாடு தினமாகக் கொண்டாட வழிவகை செய்தது அதிமுக அரசு மட்டுமே என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
கீழடியில் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற அரிய பொருள்களைப் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சிவகங்கை மாவட்டம் கொண்டலையில் ரூ.12.24 லட்சம் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற எண்ணற்ற பணிகளைத் தமிழ் மொழிக்காக இந்த அரசு மேற்கொண்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழித்தேவன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாண்டியன், காட்டுமன்னார் கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் முருகுமாறன், பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT