Published : 25 Jan 2021 07:20 PM
Last Updated : 25 Jan 2021 07:20 PM
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, ஆன்லைன் மூலம் நடக்கும் வர்த்தகத்தைப் பயன்படுத்தி கனரக மற்றும் பெரிய வாகனங்களின் இன்சூரன்ஸ் பாலிசியைக் குறைந்த கட்டணத்தில் வாங்கித் தருவதாக போலி பாலிசி தயாரித்து மோசடி செய்த 5 பேரை சைபர் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா நோய் சமூகப் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் மக்கள் வீட்டில் முடங்கினர். இந்த நேரத்தில் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை, பொருட்கள் வாங்குவது, வாகனக் காப்பீடு பெறுவது உள்ளிட்டவை ஆன்லைன் மூலம் செயல்படுத்துவது அதிகரித்தது.
இணையதளங்கள் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வாகன இன்சூரன்ஸ் பதிவு செய்தல், ஆவணங்கள் சேகரித்தல் போன்றவை காப்பீட்டு நிறுவனங்களால் பொதுமக்களின் எளிதான பயன்பாட்டிற்காகச் செயல்படுத்தப்பட்டு வந்தது.
வீட்டிலிருந்தபடியே பதிவு செய்வதாலும், வேலையும் எளிதில் முடிவதாலும் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்களிடையே இணையம் மூலம் பதிவு செய்வது அதிகரித்தது.
பொதுமக்களின் ஆர்வத்தைப் பயன்படுத்தி ஒரு மோசடி கும்பல் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டும் வாகன இன்சூரன்ஸ் எடுத்துத் தருவது போன்று, மற்ற நிறுவனங்களை விடக் குறைந்த தொகையில் இன்சூரன்ஸ் பதிவு செய்து உதவுவது போல் கோடிக்கணக்கான ரூபாயை ஏமாற்றிக் கையாடல் செய்தது தெரியவந்துள்ளது.
இவர்கள் வாகன உரிமையாளர்களின் தரவுகளைச் சேகரித்து தற்போதுள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தைவிட உங்கள் வாகனத்தின் ஆண்டு பிரீமியத்தை அதே சலுகைகளுடன் குறைந்த விலையில் பெற்றுத் தருகிறோம், வாகனத்தின் விவரங்களை மட்டும் கொடுத்தால் போதும். வாகனத்தை எடுத்துக்கொண்டு அலைய வேண்டாம். நாங்களே அனைத்தையும் முடித்து வாகன இன்சூரன்ஸ் நகலை வீட்டுக்கே அனுப்பிவிடுவோம் என செல்போனில் தொடர்புகொண்டு சாதுர்யமாகப் பேசி, நம்பவைத்து, மோசடியாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு போலியான வாகன இன்சூரன்ஸ் ஆவணத்தைக் கொடுத்துப் பல வாகன உபயோகிப்பாளர்களைத் தொடர்ந்து ஏமாற்றியுள்ளது.
இவ்வாறு மோசடி கும்பல் சொன்னதை நம்பிப் பணம் கொடுத்து வாகன இன்சூரன்ஸ் எடுத்தவர்கள் விபத்தின்போது தங்கள் வாகன இழப்பீட்டைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் கோரியபோது அது போலியான வாகன இன்சூரன்ஸ் எனத் தெரியவந்தது. இவ்வாறு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களுடன் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகார் மத்திய குற்றப்பிரிவு சைபர் குற்றப் பிரிவில் வழக்காகப் பதிவு செய்யப்பட்டது.
சைபர் பிரிவு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கண்ட மோசடியில் திருநெல்வேலியைச் சேர்ந்த மாரியப்பன் தலைமையில் ஒரு கும்பல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அவருக்கு உதவியாக திருநெல்வேலியைச் சேர்ந்த சுமதி, காப்பீடு ஏஜெண்ட் ஆனந்த், புதுக்கோட்டை மற்றும் கீரனூர் பகுதியைச் சேர்ந்த காப்பீடு ஏஜெண்டுகளான அன்சர்அலி, ஜெயினுலாப்தீன், செந்தில் குமார் ஆகியோர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது,
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் சரவணக்குமார் தலைமையில் சைபர் பிரிவு உதவி ஆணையர் துரை, காவல் ஆய்வாளர் வீராசாமி மற்றும் தனிப்படை போலீஸார் அடங்கிய தனிப்படையினர் திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டுக் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்,
இந்நிலையில் மோசடி கும்பல் தலைவன் மாரியப்பன் (40) என்பவரையும், அவரின் ஏஜெண்ட் ஆனந்தையும் (40) கைது செய்தனர். மாரியப்பனிடமிருந்து மோசடி குற்றம் தொடர்பான வழக்கு ஆவணங்கள், செல்போன், லேப்டாப் ஆகியவற்றுடன் ரொக்கத் தொகை ரூ. 9 லட்சத்து 54 ஆயிரத்து 910, 133 சவரன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், கடந்த 3 ஆண்டுகளில் இந்த மோசடியின் மூலம் மாரியப்பனால் சேர்க்கப்பட்ட பல்வேறு சொத்துகளின் ஆவணங்கள் (மதிப்பு சுமார் 3 கோடி) ஆகியவை கைப்பற்றப்பட்டன,
இந்த மோசடி கும்பல் தலைவன் மாரியப்பனுடன் நேரடித் தொடர்பு மற்றும் முழுநேர மோசடிச் செயலில் ஈடுபட்டிருந்த பிற ஏஜெண்டுகளான புதுக்கோட்டை மற்றும் கீரனூர் அன்சர் அலி (43), ஜெயினுலாப்தீன் (40), செந்தில்குமார் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வழக்கு தொடர்பான மோசடி ஆவணங்களைச் சேகரித்து வைத்திருந்த மூன்று மொபைல் போன்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன,
மேலும், முக்கியக் குற்றவாளியான மாரியப்பனுக்கு அலுவலக உதவியும், வங்கிக் கணக்கு மற்றும் லேப்டாப் மூலம் மோசடிச் செயலுக்கு உதவி புரிந்த சுமதி (29) என்பவரும் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ஒரு செல்போன், இரண்டு லேப்டாப் மற்றும் ஒரு பிரிண்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டன,
இந்த மோசடி கும்பல் இணையதளத்தைப் பயன்படுத்தி வாகனக் காப்பீட்டிற்காக ஆன்லைன் மூலம் வாகன இன்சூரன்ஸ் பெற முயலும் பயனீட்டுதாரர்களை மோசடி செய்யும் வண்ணம் சில வருடங்களாகச் செயல்பட்டு மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி கும்பலானது தனியார், அரசு காப்பீட்டு நிறுவனங்களால் இணையதளங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இன்சூரன்ஸ் விண்ணப்பத்தை வணிகம் சார்ந்த லாரி மற்றும் பேருந்து விவரங்களுக்குப் பதிலாக இருசக்கர வாகன விவரம் மற்றும் விண்ணப்பிப்பவர் விவரம் பதிவு செய்து குறைந்த பாலிசித் தொகையைச் செலுத்தியுள்ளனர்.
.
அந்தக் காப்பீட்டு ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து அந்த ஆவணத்தில் சரியான வாகன விவரம், அதிகமான காப்பீட்டு பிரீமியம் தொகை ஆகியவற்றை மாற்றம் செய்து உண்மையான காப்பீட்டு ஆவணம் போல் போலியாகத் தயார் செய்து வாடிக்கையாளர்களிடம் கொடுத்துள்ளனர்,
குறைந்த கட்டணத்தில் வாகனக் காப்பீடு பெறுவதாக எண்ணி இந்த மோசடி கும்பலிடம் சிக்கும் வாகன உரிமையாளர்கள் போலியான ஆவணத்தைப் பெறுவது மட்டுமின்றி வாகனத்திற்கான சேதம் மற்றும் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும்போது இன்சூரன்ஸ் தொகை பெற இயலாமல் போகிறது.
மேலும், இந்த மோசடி கும்பல் பெற்றுத் தரும் வாகன இன்சூரன்ஸ் ஆவணமானது முறையற்ற வாகனம், போலியான வாகன விவரங்கள், காப்பீட்டுத் தொகையுடன் சித்தரிக்கப்பட்டு, பார்ப்பதற்கு அசல் போலவே இருக்கும் என்பதால் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் தக்க காப்பீடு பெற்றுவிட்டதாக நம்பிக்கை கொள்கிறார்கள்,
சமுக வலைதளம் மூலமாக வாகன இன்சூரன்ஸ் ஆவணம் பெற்றுள்ள அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்களது வாகனக் காப்பீட்டு ஆவணத்தின் உண்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து அந்தந்தக் காப்பீட்டு நிறுவன அலுவலகம் அல்லது இணையதளம் மூலமாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT