Published : 25 Jan 2021 06:42 PM
Last Updated : 25 Jan 2021 06:42 PM
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அப்படி நீட் தேர்வை ரத்து செய்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா பேசினார்.
ராமநாதபுரம் அரண்மனை முன்பு நேற்று இரவு எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் அங்குச்சாமி வரவேற்றார். மகளிர் அணி மாநில இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மருத்துவர் அணி மாநிலத் துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.மணிகண்டன், ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளர் சதன் பிரபாகர் எம்எல்ஏ, தலைமைக் கழகப் பேச்சாளர்கள் க.அறிவானந்தம், அல்லிக்கண்ணன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளருமான அ.அன்வர்ராஜா பேசும்போது, ''ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை முதல்வர் பழனிசாமி கொண்டு வந்துள்ளார். இதுபோன்ற ஆயிரக்கணக்கான திட்டங்களைக் கொண்டுவந்து சிறந்த முதல்வராகத் திகழ்கிறார்.
மத்திய அரசு எல்லோருக்குமான ஒரே தகுதித் தேர்வு என நீட் தேர்வைக் கொண்டு வந்தது. இதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்தார். முதலில் நாடு முழுவதும் எல்லோருக்குமான ஒரே கல்வியைக் கொண்டு வாருங்கள், அதற்கு எங்களுக்கு 5 ஆண்டுகள் தேவைப்படும், அதுவரை நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்றார். ஆனால், மத்திய அரசு நீட் தகுதித் தேர்வைக் கொண்டு வந்துவிட்டது. இதை உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்து உத்தரவிட்டது.
அப்படியிருக்கும்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதியை அளிக்கிறார். அப்படி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால், நான் தற்கொலை செய்து கொள்கிறேன். ஸ்டாலினுக்காக நான் உயிரை விடுகிறேன்.
இதுபோன்றுதான் கடந்த மக்களவைத் தேர்தலின்போது விவசாயக் கடன் ரத்து, கல்விக் கடன் ரத்து எனப் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தார். நீட் தகுதித் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது. அதனால்தான் நீட் பாதிப்புக்காக முதல்வர் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்து சாதனை படைத்தார்'' என்று அன்வர்ராஜா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT