Published : 25 Jan 2021 05:57 PM
Last Updated : 25 Jan 2021 05:57 PM
கோவை மாநகரில் முதல் முறையாக, கடந்த ஆண்டு 3 இலக்க எண்ணிக்கையில் சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.
கோவை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் தனிப் பயன்பாடு வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ப, விபத்துகளின் எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.
மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ரூ.253 கோடி மதிப்பில் திருச்சி சாலையிலும், ரூ.1,621 கோடி மதிப்பில் அவிநாசி சாலையிலும் உயர்மட்டப் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அதேபோல், உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை, கவுண்டம்பாளையத்திலும் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதைத் தவிர, மாநகரில் விபத்துகள், உயிரிழப்புகள், நெரிசல்களைத் தவிர்க்க, மாநகரக் காவல்துறையினர், முக்கிய இடங்களில் சிக்னல்கள் அமைத்துக் கண்காணித்தும், வாகனத் தணிக்கை மேற்கொண்டு விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிந்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு மார்ச் இறுதி முதல் ஏப்ரல் இறுதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்தியாவசியப் பயன்பாடுகளைத் தவிர, 95 சதவீத வாகனங்கள் இயங்கவில்லை. அதைத் தொடர்ந்து ஒரு மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதும் வாகனங்கள் இயங்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னரே, வாகனங்கள் முன்பு போல் மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டன. மேற்குறிப்பிட்ட மாதங்களில் வாகனப் போக்குவரத்து முழுமையாக இல்லாததால் விபத்துகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது.
வழக்குகள் குறைந்தன
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) ஆர்.முத்தரசு கூறும்போது, ‘‘மாநகரில் முதல் முறையாக 3 இலக்க எண்ணிக்கையில் சாலை விபத்துகள் கடந்த 2020-ம் ஆண்டு பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகள் எல்லாம் பதிவாகும் விபத்துகள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விடும்.
அதாவது, மாநகரில் கடந்த 2017-ம் ஆண்டு 301 உயிரிழப்பு விபத்து வழக்குகள், 2018-ம் ஆண்டு 149 உயிரிழப்பு வழக்குகள், 2019-ம் ஆண்டு 125 உயிரிழப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே, 2020-ம் ஆண்டு 65 உயிரிழப்பு வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதில் 2017-ம் ஆண்டு 309 பேரும், 2018-ம் ஆண்டு 158 பேரும், 2019-ம் ஆண்டு 132 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆனால், 2020-ம் ஆண்டு 65 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
மாநகரில் கடந்த 2018-ம் ஆண்டு 1,136 சாலை விபத்து வழக்குகளும், 2019-ம் ஆண்டு 1,062 சாலை விபத்து வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதுவே, கடந்த 2020-ம் ஆண்டு 705 சாலை விபத்து வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
விபத்துகள் சதவீதம் குறைய, கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு முதன்மையான காரணம் என்றாலும், அதிகரிக்கப்பட்ட விதிமீறல் வழக்குகளும் முக்கியக் காரணமாகும். முன்பு மாநகரில் தினமும் 3 ஆயிரம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு இறுதிகளில் தினமும் 4 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தற்போது தினமும் 5 ஆயிரம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. நவீன கேமரா மூலம், போலீஸ்-இ-ஐ செயலி மூலம், நேரடியாக மேற்கண்ட விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. காரில் செல்லும்போது, சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 2019-ல் 35,571 வழக்குகளும், கடந்த 2020-ம் ஆண்டு 47,418 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT