Published : 25 Jan 2021 03:14 AM
Last Updated : 25 Jan 2021 03:14 AM
தமிழக அரசை மிரட்டி மத்திய பாஜக அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனால், தமிழக மக்களை யாரும் கட்டுப்பாட்டில் வைக்க முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பன்னீர்செல்வம் பூங்கா மற்றும் ஓடாநிலை உள்ளிட்ட பகுதிகளில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார். இப்பகுதிகளில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
எல்லையைத் தாண்டிய நிலையிலும் ஒருமுறை கூட சீனா குறித்து தைரியமாக பிரதமர் பேசவில்லை. இந்தியாவின் பொருளாதாரம் பின் தங்கியுள்ளது என்பதை சீனா உணர்ந்துள்ளது. தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்களை பலப்படுத்தினால், இந்தியாவுக்குள் நுழையும் தைரியம் சீனாவுக்கு இருக்காது. பொருளாதார ரீதியாக பலம்பெற்றிருப்போம்.
மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவை விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரானது. நாட்டில் உள்ள 15 பெரிய தொழிலதிபர்களுக்கு ரூ.10 லட்சம் கோடியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுதோறும் ஒவ் வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ரூ.72 ஆயிரத்தை வழங்கும் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளோம். இந்தியா ஏழை நாடு அல்ல. மக்கள்தான் ஏழையாக உள்ளனர். நமது நாட்டில் சரியான முறையில் பணம் பகிர்ந்தளிக்கப்படவில்லை.
மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தித் துறை பின்தங்கியுள்ளது. தமிழக அரசை மிரட்டி மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனால், தமிழக மக்களை யாரும் கட்டுப்பாட்டில் வைக்க முடியாது.
தமிழ் மொழி, பாரம்பரியம் மற்றும் அதன் வரலாற்றுக்கும் உரிய மரியாதை தர பாஜகவும் ஆர்எஸ்எஸும் தவறிவிட்டன.
தமிழக மக்கள் விரும்பாததை அதிகாரத்தால் திணிக்க முயல் கின்றனர். நாடு முழுவதும் ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே கருத்து என்ற கொள்கையை புகுத்த பிரதமர் முயற்சிக்கிறார். பன்முகத்தன்மைதான் நமது நாட்டின் பலமாகும். தமிழக மக்களின் போர் வீரனாக டெல்லியில் நான் செயல்படுவேன்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
யாரும் ஏமாற்ற முடியாது
பின்னர் திருப்பூர் மாவட்ட எல்லையான ஊத்துக்குளியில் ராகுல் பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜகவினர், தமிழர்களை ஏமாற்றிவிடலாம் எனக் கருதுகின்றனர். ஆனால், தமிழர்களை யாரும் ஏமாற்ற முடியாது. தமிழக மக்களின் மொழி, வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, தொழில் மேம்பாடு என பிற மாநிலத்தவர் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளன. நான் தமிழன் இல்லையென்றாலும், தமிழின் மதிப்பை புரிந்தவன்.
தமிழகத்தில் வளங்களும் வாய்ப்புகளும் அதிகம் இருந்தும், மக்கள் வளம் பெறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவை தமிழகத்தை கடுமையாகப் பாதித் துள்ளன.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக விவசாயிகள் திரண்டு, மத்திய அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
தமிழக மக்களின் மீது, குறிப்பாக இளைய தலைமுறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை மத்திய அரசால் நடத்தப்படும் அரசாங்கமாகவோ, பிரதமரால் கைகள் கட்டப்பட்ட அரசாங்கமாகவோ இருக்காது.
மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் அரசாக இருக்கும். வெண்ணெய், நெய் ஆகியவற்றுக்குப் பிரபலமான ஊத்துக்குளி மக்களின் கடின உழைப்பைப் பாராட்டு கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் தேசிய செயலர் சஞ்சய் தத், தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநிலப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT