Published : 25 Jan 2021 03:15 AM
Last Updated : 25 Jan 2021 03:15 AM

ரூ.64 கோடியில் பசுமை பூங்காவாகும் மாம்பலம் கால்வாய்: பூங்கா, சைக்கிள் பாதை, நடைபாதைகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை

மாம்பலம் கால்வாய் கரையில் அமைக்கப்படும் நேரியல் பூங்காவின் நுழைவுவாயில் தோற்றம் மற்றும் அங்கு அமைக்கப்பட உள்ள ஸ்மார்ட் பைக் நிலையம் ஆகியவற்றை காட்டும் மாதிரி படம்.

சென்னை

சென்னையில் கழிவுநீர், பிளாஸ்டிக் பொருட்களால் மாசுபட்டுள்ள மாம்பலம் கால்வாயை ரூ.64 கோடியில் பசுமை பூங்காவாக மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னையில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை முக்கிய வடிகாலாக உள்ளன. இவற்றுடன் 52 துணை கால்வாய்கள் இணைகின்றன. இவை மிக முக்கிய வெள்ள வடிகால்களாக உள்ளன. அவ்வாறு மாம்பலத்தில் தொடங்கி தியாகராய நகர், நந்தனம் வழியாக அடையாற்றுடன் இணையும்துணை கால்வாய் ‘மாம்பலம் கால்வாய்’ என அழைக்கப்படுகிறது. இதன் நீளம் 5.6 கிமீ. பொதுமக்களின் அலட்சியப் போக்கு காரணமாக அதில் எப்போதும் கழிவுநீரும், பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைந்து அசுத்தமாக காட்சியளிக்கிறது. இதை சீரமைத்து, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பசுமை பூங்காவாக மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாம்பலம் கால்வாய் 5.6 கிமீநீளம் கொண்டது. இது அடையாற்றில் இணையுமிடத்தில் ரெட்டிகுப்பம் கால்வாயும் இணைகிறது. இதன் நீளம் 470 மீட்டர். இவ்விரு கால்வாய்களையும் சீரமைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, மக்களை அதிகம் கவரும் பகுதியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 64 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கால் வாயில் இருக்கும் திடக்கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டு, கழிவுநீர் விடப்படும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு, குடிநீர் வாரிய கழிவுநீரேற்று நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட உள்ளன. இதன் மூலம் இந்த கால்வாயில் வீட்டு கழிவுநீர் விடுவது முற்றிலும் தடுக்கப்படும்.

மேலும் அந்த கால்வாயின் கரையோரங்களில் இரு புறமும் 6 கிமீநீளத்துக்கு பசுமை படர்ந்த நேரியல்பூங்காக்கள், நடைபாதைகள், சைக்கிள் வழித்தடங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இந்தவழித்தடங்களையொட்டி நிழல்தரும் வகையில் உள்ளூர் வகைமரக்கன்றுகளும் நடப்பட உள்ளன.

மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் பைக்குகளும் அங்கு நிறுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த தற்போது ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. அதை இறுதி செய்து, பணி ஆணை வழங்கிய பின்னர், 9 மாதங்களில் பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மாம்பலம் கால்வாய் முழுவதும் பசுமை படர்ந்து, ரம்மியமான காட்சியை கொடுக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x