Published : 02 Nov 2015 11:17 AM
Last Updated : 02 Nov 2015 11:17 AM
அரசு மருத்துவமனையில் திருடப்பட்ட குழந்தையின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து கடந்த 10 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர் மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற தம்பதி.
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் முத்துமாணிக்கம். இவரது மனைவி மாரீஸ்வரி. இருவரும் பார்வையற்றவர்கள். முத்துமாணிக்கம் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் லிப்ட் ஆபரேட்டராகப் பணிபுரிந்து வருகிறார்.
பிரசவத்துக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2006-ம் ஆண்டில் மாரீஸ்வரி சேர்க்கப்பட்டார். அவருக்கு 6.1.2006-ல் பிறந்த பெண் குழந்தை அடுத்த சில மணி நேரத்தில் திருடப்பட்டது. அந்தக் குழந்தை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
மறு ஆண்டு மாரீஸ்வரி 2-வது முறையாக கர்ப்பம் தரித்தார். திருட்டு பயம் காரணமாக அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் தனியார் மருத்துவமனையில் 2-வது பெண் குழந்தையைப் பெற்றார். அவரது 2-வது மகள் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.
முத்துமாணிக்கத்தின் முதல் குழந்தை திருடப்பட்டு 10 ஆண்டுகள் முடிய 3 மாதங்களே உள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவின்படி முத்துமாணிக்கம் தம்பதிக்கு தமிழக அரசு சார்பில் சென்ற வாரம் இடைக்கால நிவாரணமாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. அந்தப் பணத்தை 2-வது மகளின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் டெபாசிட் செய்துள்ளார். முத்துமாணிக்கத்தின் 2-வது மகள் கல்லூரி வரை படிப்பதற்கான முழு கல்விச் செலவையும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேஷன் ஏற்றுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் உதவியால் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ள முத்துமாணிக்கம் தம்பதி, ‘முதல் குழந்தையை எப்படியாவது போலீஸார் கண்டுபிடித்து தங்களுடன் சேர்த்து வைத்துவிடுவார்கள்’ என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இது தொடர்பாக முத்துமாணிக்கம் ‘தி இந்து’விடம் நேற்று கூறியதாவது:
இந்த 10 ஆண்டுகளாக முதல் குழந்தை எங்களுடன் இருந்தால் எப்படியிருக்கும், கஷ்டப்படும் நேரத்தில் அந்த குழந்தை உதவியாக இருந்திருக்குமே என்ற நினைப்பில் நாட்களை கடத்துகிறோம். நாங்கள் இருவரும் முழு பார்வையற்றவர்கள். மற்றவர்கள் போல் அதிகம் சம்பாதிக்க முடியாது. தேவைகள் அதிகமாக இருப்பினும், குறைவான சம்பளத்தில் மற்றவர்கள் மத்தியில் சரிசமமாக, யாரிடமும் கையேந்தாமல் கவுரவமாக வாழ்கிறோம். எனது சம்பளம் வீட்டு வாடகைக்கும், சாப்பாட்டுக்கும் போதவில்லை. 2-வது மகளின் திருமணத்துக்கு பணம் சேர்க்க வழியில்லாமல் இருந்த நிலையில் எங்களுக்கு ரூ.3 லட்சம் கிடைத்துள்ளது. இதற்காக நீதிபதிகள், தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம்.
பார்வையற்ற எங்களுக்கு பிள்ளைகள்தான் உதவி. மகளைக் கண்டுபிடித்து ஒப்படைத்தால் மிகவும் நன்றியுடையவர்களாக இருப்போம் என்ற முத்துமாணிக்கம், ‘எங்களின் நிலைமை மற்றவர்களுக்கு வரக்கூடாது என இறைவனை வேண்டிக்கொள்வதாக’ கலங்கிய குரலில் கூறியவிட்டு, கண்களில் கருப்புக் கண்ணாடியை மீறி கசிந்த கண்ணீர் துளிகளை துடைத்துக் கொண்டார்.
மாரீஸ்வரி கூறும்போது, ‘அரசு மருத்துவமனைகளில் குழந்தை திருட்டை தடுக்க குழந்தையின் கையில் ரேடியோ அதிர்வு அடையாள பட்டையை அணிவிக்க முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த முறையால் குழந்தை திருட்டுகள் குறையும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT