Published : 14 Jun 2014 07:43 PM
Last Updated : 14 Jun 2014 07:43 PM
பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது செயலை ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். அவருடன் வழிப்பறியில் ஈடுபட்டதாக மேலும் இருவர் கைதாகியுள்ளனர்.
பொள்ளாச்சி, தமிழ் சுவிஷேச லுத்திரன் திருச்சபை ஆலய (TELC) நிர்வாகத்தின் கீழ் 20 வருடங்களுக்கு மேலாக மாணவர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அனுமதி பெறாமல், பாதுகாப்பு வசதிகள் இன்றி இயங்கி வந்த இந்த விடுதியில் 3 சிறுமிகள் உள்பட 14 வயதிற்குட்பட்ட 20 பேர் தங்கி படித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவில் சமூகவிரோதிகள் சிலர் விடுதிக்குள் புகுந்து, இரண்டு சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். பல மணி நேரம் கழித்து விடுதி ஊழியர்கள் அந்த சிறுமிகள் இருவரையும் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள் இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம் 2012 (போஸ்கோ), 336 (A) சிறுமிகளை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லுதல் (procuration of minor girl), 506 (ii) கொலை மிரட்டல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் ஒரு சிறுமி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.
தேடப்பட்ட நபர் கைது..
இந்நிலையில், சிறுமிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் பேரிலும் வெள்ளிக்கிழமை 4 பேரை போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தினர். ரத்த மாதிரி மற்றும் தடயங்களை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
இறுதியாக, இன்று (சனிக்கிழமை) சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக வால்பாறை, கக்கன்காலனியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் வி.வீரன் (எ) வீராச்சாமியை (23) போலீஸார் கைது செய்தனர். இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் பணப்பாளையம். இவர் திருமணமானவர்.
கைதானவர் ஒப்புதல்...
போலீஸார் கூறுகையில், "புதன்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் வீராச்சாமி, அவரது நண்பர்கள் கோபிநாத் (23), அரவிந்த் (19) மூவரும், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே செல்போன் திருடியுள்ளனர். அங்கு மூவரில் வீராச்சாமி மட்டும் பிரிந்து சென்று விடுதி வளாகத்திற்குள் புகுந்துள்ளார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்களை எழுப்பி 10, 11 வயதுடைய இரண்டு சிறுமிகளை கத்தியைக் காட்டி மிரட்டி, பாழடைந்த கட்டிடங்கள் வழியாக வணிக வளாகத்தின் மீது அழைத்துச் சென்றுள்ளான். அங்கு அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
விடுதி ஊழியர்கள் சிறுமிகளை தேடி வந்தபோது, வீராசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து வியாழக்கிழமை முதல் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் வீராசாமி பிடிபட்டார். பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் வைத்து வீராச்சாமியிடம் விசாரணை நடைபெற்றது. அதில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார்" என்றனர்.
நண்பர்கள் சிறையிலடைப்பு...
இந்நிலையில், வீராச்சாமியின் நண்பர்களான கோபிநாத், அரவிந்த ஆகியோர் மீது கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுதல் (392) பிரிவின் கீழ் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இன்று மாலை பொள்ளாச்சி ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் நீதிபதி லிங்கம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அதில் 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
விடுதி நிர்வாகம் மீது நடவடிக்கை
அனுமதி பெறாமல் முறைகேடாக இயங்கி வந்ததால் விடுதிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. குழந்தைகள் பாதுகாப்புத்துறை அதிகாரி ஜி.விஜயா பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விடுதி காப்பாளர் இ.பி.சுரேஷ்குமார், விடுதி நிர்வாகி பாக்கியநாதன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு அதிகாரி கொடுத்த அறிவிப்பை புறக்கணித்ததாக (188), உயிருக்கு ஆபத்து விளைவித்தல் (336), சட்டத்திற்கு புறம்பாக தங்க வைத்தது (342) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் திருச்சியில் இருந்த பாக்கியநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுரேஷ்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்று திருச்சியிலுள்ள டி.இ.எல்.சி தலைமை நிர்வாகத்தினர் பொள்ளாச்சியில் ஆலோசனை நடத்துவதாக கூறப்பட்டது. ஆனால் நிர்வாகத் தரப்பில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் அவர்களது வருகை தள்ளிவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT