Published : 24 Jan 2021 07:54 PM
Last Updated : 24 Jan 2021 07:54 PM
தமிழர் அடையாளம், உரிமையை டெல்லி எஜமானர்களிடம் முதல்வர் பழனிசாமி, அடகு வைத்துள்ளார் என திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பொதுமக்களிடம் பேசியதாவது:
“ சிவகங்கை மாவட்டத்திற்கு கலைஞர் ஆட்சியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம், சாலை வசதி என ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் குறைகளை கேட்க கூட ஆளில்லை. ஒரு புதிய தொழிற்சாலை கூட வரவில்லை. பெண்களுக்கு எதிரான அரசாக உள்ளது.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தில் புகார் கொடுத்த பெண்கள் புகைப்படங்களை போலீஸாரே வெளியிட்டு இனி யாரும் புகார் கொடுக்க முடியாதபடி செய்துள்ளனர். திமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை நிச்சயம் கைப்பற்றும். மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று கலைஞர் ஆட்சியை தருவார் ”என்று பேசினார்.
அதன்பிறகு சங்கராபுரம் ஊராட்சி வைரவபுரத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: “தமிழக பெண்கள் அதிமுக ஆட்சி மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். முதல்வரின் பாதுகாப்புக்காக சொல்கிறேன். பெண்கள் கூட்டத்தில் தனியாக இறங்கி பேசி விடாதீர்கள். உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்.
தமிழகத்தில் குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. கிராமச்சாலைகளை விடுத்து, எட்டு, பத்துவழிச் சாலை அமைக்கின்றனர். அதில் தான் வருமானம் வருகிறது. தேவையில்லாத பகுதிகளில் பாலம் அமைக்கின்றனர். சுய உதவிக்குழுக்களுக்கு கடன், மானியம் வழங்கவில்லை. இதனால் திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட சுய உதவிக்குழு இன்று முடங்கியுள்ளது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் நடக்கிறது. ஸ்டாலின் முதல்வரானால் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
நான் விவசாயி எனக்கூறும் பழனிசாமி பச்சை துண்டை கட்டிக் கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்கிறார். பாதாளச் சாக்கடை திட்டம் பல இடங்களில் கிடப்பில் உள்ளது சங்கராபுரம் ஊராட்சித் தேர்தலில் மோசடி செய்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் தீர்வு காணப்படும். தமிழர்களின் அடையாளம், உரிமைகளை டில்லி எஜமானர்களிடம் அடகு வைத்துள்ளார் பழனிசாமி. ஆட்சியை காப்பற்றவேண்டும், வழக்குகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக மக்களை வஞ்சிகிறார்.
கதர் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான சிவகங்கையிலேயே கதர் மையம் மூடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மாவட்டச் செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT