Published : 24 Jan 2021 07:40 PM
Last Updated : 24 Jan 2021 07:40 PM
யானைக்கு தீ வைத்தது தொடர்பாக, மசினகுடியில் உண்மை கண்டறியும் குழுவின் மத்திய அரசின் யானைகள் பாதுகாப்பு இயக்ககம்(பிராஜெக்ட் எலிஃபேண்ட்) இணை இயக்குநர் முத்துதமிழ் செல்வன் விசாரணை மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியில் தங்கும் விடுதிக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த யானையை விரட்ட, விடுதி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தீ வைத்த சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த விடுதியின் உரிமையாளர் மல்லனின் மகன் ரேமண்ட் டீன் மற்றும் ஊழியர் பிரசாத் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான ரிக்கி ரயானை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், யானைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு விசாரணை மசினகுடியில் மேற்கொண்டது.
மத்திய அரசின் யானைகள் பாதுகாப்பு இயக்கக(பிராஜெக்ட் எலிஃபேண்ட்) இணை இயக்குநர் மூத்த விஞ்ஞானி முத்துதமிழ் செல்வன் சம்பவம் நடந்த மாவனல்லா பகுதியை இன்று ஆய்வு செய்தார். பின்னர் மசினகுடி பகுதியில் உள்ள மக்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறும் போது, ‘மசினகுடியில் மனித-விலங்கு மோதல்கள் நடந்ததில்லை. இங்குள்ள மக்கள் இயற்கையோடு இசைந்து வாழ்கின்றனர். இத்தகைய சம்பவம் இதுவே முதன்முறை. இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால், நடந்த சம்பவம் குறித்த உண்மையை கண்டறிய, மத்திய அரசின் யானைகள் பாதுகாப்பு இயக்ககம்(பிராஜெக்ட் எலிஃபேண்ட்) இணை இயக்குநர் மூத்த விஞ்ஞானி முத்துதமிழ் செல்வன் மசினகுடி பகுதியில் ஆய்வு செய்தார். அவர் நடந்த சம்பவம் குறித்து மக்களிடம் விசாரணை மேற்கொண்டார். இது குறித்து அரசுக்கு அறிக்கையை சமர்பிப்பார்’ என்றார்.
இந்நிலையில், சீகூர், சிங்காரா வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ‘புதிதாக மூன்று வனவர்கள் பணியமர்த்தப்பட்டதால், வனவர்கள் பணியிட மாற்றம் வழக்கமான நடவடிக்கை’ என வனத் துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT