Published : 24 Jan 2021 05:54 PM
Last Updated : 24 Jan 2021 05:54 PM
கோவை பீளமேடு, ரொட்டிக்கடை மைதானத்தில் முதல்வரை வரவேற்க வைக்கப்பட்டிருந்த, கரும்புகளை போட்டி போட்டுக் கொண்டு, பொதுமக்கள் எடுத்துச் சென்றனர்.
கோவை சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அவிநாசி சாலை, பீளமேடு ராதாகிருஷ்ணா மில் ஸ்டாப் பகுதியில் இருந்து காந்தி மாநகர் செல்லும் வழியில் உள்ள ரொட்டிக்கடை மைதானத்தில் இன்று (24-ம் தேதி) காலை முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையாற்றினார். முன்னதாக, முதல்வரை வரவேற்கும் வகையில் அவிநாசி சாலை பீளமேடு ராதாகிருஷ்ணா மில் ஸ்டாப் பகுதியில் இருந்து ரொட்டிக்கடை மைதானத்துக்கு செல்லும் வழியான விளாங்குறிச்சி சாலையின் நுழைவாயிலில், சாலையின் இருபுறமும் ஏராளமான வாழைமரங்கள் கட்டப்பட்டு இருந்தன.
அதில் பழங்கள், அருகே அலங்கார வளைவில் இளநீர் போன்றவை தொங்க விடப்பட்டு இருந்தன. அதேபோல், விளாங்குறிச்சி சாலை நான்கு முக்கு பகுதியில் இருந்து ரொட்டிக்கடை மைதானம் வரை, முதல்வரை வரவேற்கும் வகையில் சுமார் 150 மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறமும் நெருக்கமாக கனமான கரும்புகள் வரிசையாக கட்டப்பட்டு இருந்தன. ஆயிரம் எண்ணிக்கைக்குமு் மேற்பட்ட கரும்புகள், செயற்கை சுவர் போல் அங்கு கட்டப்பட்டு இருந்தன. இந்த ஏற்பாடுகளை அப்பகுதி அதிமுகவினர் செய்து இருந்தனர்.
அதன்படி, முதல்வரும் இன்று மேற்கண்ட வழித்தடம் வழியாக அவிநாசி சாலையில் இருந்து விளாங்குறிச்சி சாலையில் நுழைந்து, நான்கு முக்கு பகுதியைக் கடந்து, ரொட்டிக்கடை மைதானத்துக்கு வந்தார். ஏறத்தாழ 15 நிமிடங்கள் அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் பேசிவிட்டு சென்றார். முதல்வர் பழனிசாமி பேசும் வரை அமைதியாக இருந்த மக்கள், அவர் பேசி முடித்து சென்ற , அடுத்த சில நிமிடங்களில் மேற்கண்ட 150 மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டிருந்த கரும்புகளை, போட்டி போட்டுக் கொண்டு ஆளுக்கு ஒருவராக பிய்த்து எடுத்துச் சென்றனர். சில நிமிடங்களில் அந்த இடத்தில் ஒரு கரும்பு கூட இல்லை.
அதேபோல், அவிநாசி சாலை ராதாகிருஷ்ணா மில் ஸ்டாப் அருகே வைக்கப்பட்டு இருந்த வாழைகள், அதிலிருந்த பழச்சீப்புகளையும் மக்கள் எடுத்துச் சென்றனர். இதேபோல், சிங்காநல்லூர் சந்திப்புப் பகுதியில் இருந்த வாழைகளையும், பிரச்சாரம் முடிந்தவுடன் மக்கள் எடுத்துச் சென்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் வேறு வழியின்றி,‘ பொதுமக்கள் பொறுமையாக எடுத்துச் செல்லுங்கள்,’’ என மைக்கில் அறிவுறுத்தியபடி இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT