Published : 24 Jan 2021 10:36 AM
Last Updated : 24 Jan 2021 10:36 AM
தேனி மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் அவர்களை கவரும்விதமாக முதற்கட்ட பிரச்சாரங்களை கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், கம்பம், போடி, ஆண்டிபட்டி என்று நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் 4 தொகுதி களையும் அதிமுக கைப்பற்றி இருந்தது. பின் நடந்த இடைத்தேர்தலில் ஆண்டி பட்டி, பெரியகுளம் தொகுதி திமுக வசம் சென்றது. இதனால் தற்போது சமபலத்துடன் இரு கட்சிகளும் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகள், வளர்ச்சிப் பணிகளை முன்னிறுத்தி அதிமுக களம் இறங்கிஉள்ளது. திமுகவைப் பொறுத்தவரை இம்முறை எப்படியும் ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில் அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளும் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக பல்வேறு வியூகங்களை கட்சிகள் வகுக்கத் தொடங்கி உள்ளன. இதில் முதன்மையானதாக பெண்கள் ஓட்டுக்களை பலரும் குறிவைக்கத் தொடங்கி உள்ளனர். காரணம் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளிலுமே பெண் வாக்காளர்கள் அதிகம் இருப்பதுதான்.
கடந்த மாதம் வெளியான வாக்காளர் வரைவு பட்டியலில் மாவட்டத்தில் 5 லட்சத்து 55 ஆயிரத்து 329 பெண் வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போதைய இறுதிப்பட்டியல் நிலவரப் படி இதன் எண்ணிக்கை 5 லட்சத்து 72 ஆயிரத்து 479 ஆக உயர்ந்துள்ளது. ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 51 ஆயிரத்து 826பேர் உள்ளனர். தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் கிராமங்கள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது. பல பகுதிகளிலும் பாமர பெண்களிடம் அரசியல் ரீதியான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. வாக்குப்பதிவு நேரங்களில் உருவாகும் மனோநிலைக்கு ஏற்பவே அவர்கள் வாக்களித்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் பெண்களுடைய வாக்குகளை மையப்படுத்தி தற்போது முதற்கட்ட பிரசாரப் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
சமீபத்தில் திமுக சார்பில் தேனியில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடை பெற்றது. இதில் முழுவதும் பெண்களை மையப்படுத்தியே நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் அனைவரையும் உட்கார வைத்து அவர்கள் முன்பு ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். ஸ்டாலினிடம் பேசு வதற்கும், தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் முழுக்க முழுக்க பெண்களே அனுமதிக்கப்பட்டனர். சமையல் எரிவாயு, மளிகைப் பொருள் விலை உயர்வு என்று பெண்களுடன் நேரடித் தொடர்புடைய பிரச்சினைகளை பட்டியலிட்டதுடன், வெற்றி பெற்றால் நகைக்கடன் தள்ளுபடி என்றார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்த உண்மையை வெளிக்கொணர்வோம் என்றும் வாக்குறுதி வழங்கினார். என்னதான் மாற்றுக்கட்சியாக இருந்தாலும் ஜெயலலிதா ஒரு பெண் முதல்வர் என்ற ரீதியிலான அவரது அணுகுமுறை அதிமுக ஆதரவு மனநிலை கொண்ட பெண்களை கவரும் வகையில் இருந்தது. இதே போல் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கடந்த மாதம் தேனிக்கு பிரசாரத்திற்கு வந்திருந்த போதும் பெண்களை முன்னிறுத்தியே அவரின் நிகழ்ச்சி அமைந்திருந்தது.
ஆட்சிக்கு வந்ததும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மாத வருமானம் வழங்குவேன். ஆட்சி நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும் என்று பிரச்சாரம் செய்தார். பெண்களும் அதிகளவில் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறியதுடன் சாதனை செய்த பல பெண்களையும் உதாரணம் காட்டினார். தேனி மாவட்ட தேர்தல் வெற்றிகளில் இதுவரை பெண்கள் ஓட்டுதான் பிரதானமாக அமைந்துள்ளது.
அதனால் அவற்றை குறிவைத்து பல கட்சிகளும் மகளிருக்கான திட்டங்களை, மேம்பாடுகளை கூறி பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. இருப்பினும் காலமாற்றத்தினால் கிராமப்புற பெண்கள் மனோநிலையிலும், அரசியல் கண்ணோட்டத்திலும் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. இளம்பெண்கள், புதிய பெண் வாக்காளர்கள் அரசியலை ஆழமாக உள்வாங்கத் தொடங்கி உள்ளனர். இதனால் பெண்களின் வாக்குகள் குறித்த அரசியல் கட்சிகளின் கணிப்புகளின் பலன் தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT