Last Updated : 24 Jan, 2021 10:14 AM

 

Published : 24 Jan 2021 10:14 AM
Last Updated : 24 Jan 2021 10:14 AM

கற்றக் கலைகளே கவலைகளை போக்கும் மருந்து

நலமுடன் வாழும் பலர், ‘வாழும் காலத்தில் சாதிக்க வேண்டும்’ என எண்ணினாலும் அதற்கான முயற்சியில் இறங்காமலேயே கனவிலேயே காலம் கழிப்பதுண்டு. ஆனால், ‘தன்னுடைய வாழ்நாள் எண்ணப்படுகிறது’ என்று தெரிந்தே தனது பன்முக நடனத் திறமையால் நடன மயில், நாட்டியப் பேரொளி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார் ஏஞ்சலின் ஷெரில்.

அவர் கற்ற கலைகளே அவரை விழுதுகளாய் தாங்கி பிடிக்கிறது என்றால் மிகையல்ல. கடலூர் சாவடியைச் சேர்ந்த அமிர்தராஜ் - ஜீவா தம்பதியரின் ஒரே மகளான ஏஞ்சலின் ஷெரில். தஞ்சை தனியார் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் 2-ம் ஆண்டு பயின்று வருகிறார். பிறக்கும் போதே இவருக்கு, ‘அட்ரினல்’ என்ற நாளமில்லா சுரப்பி கிடையாது. ‘பிறவிக் கோளாறை குணப்படுத்த முடியாது.

மாத்திரைகளோடு வாழ முடியும்’ என்பதை மருத்துவர்களும் பெற்றோரும் புரிய வைக்க அதற்கேற்ற வகையில் தனது வாழ்நாளை மாற்றிக் கொண்டார் ஏஞ்சலின். தனது பெற்றோரின் உறு துணையோடும், சக கலைஞர்களின் ஊக்கத்தோடும் கலை சார் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அவரிடம் பேசினோம்.

“பிறவியிலேயே நாளமில்லா சுரப்பி குறைபாடு இருந்தாலும் ஒரு கட்டத்திற்குப் பின் தான் தெரிய வந்தது. நிரந்தர தீர்வு கிடையாது என்பது அறிந்து, மருந்து மாத்திரைகளோடு வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். எனது நடனத் திறமையின் மூலம் 13 முறை உலக சாதனை படைத்திருக்கிறேன்” என்றார்.

பரதம், குச்சிப்புடி,சிலம்பம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலைகளை நீக்கமற கற்று அதன் மூலம் சாதனைகள் நிகழ்த்தி நடன மயில், கிராமத்து மயில், வளர் இளம் மயில்,கலை இளம் மயில், நடனப் பதுமை, நடன சுடர் நாட்டிய பேரொளி, ஆற்றல் மங்கை, சேவை ரத்னா, சக்தி சாதனா, அவள் இளவரசி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்திருக்கும் ஏஞ்சலின் தனது பன் முகத் தன்மையே மேலும் விரிவாக்கும் வகையில் திரைப்படங்களிலும் தனது முத்திரையை பதித்துள்ளார். இவரது திறமையை பாராட்டிய திரைப்பட நடிகர் ராகவா லரான்ஸ் அவருக்கு சில உதவிகளையும் செய்து வருகிறார்.

தற்போது சமுத்திரக்கனி இயக்கும் `நாடோடிகள் -2' படத்திலும் ஒரு பாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுபற்றியும் ஏஞ்சலினிடம் கேட்டோம். “என்னுடைய கல்லூரியில் நிகழ்ந்த கலாச்சார நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி, என்னுடைய சிலம்பத்துடன் கூடிய பொய்க்கால் குதிரை ஆட்டத்தை பார்த்து விட்டு, கல்லூரியில் என்னைப் பற்றி விசாரித்து, நடோடிகள்-2 படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார்.

என் உடலுக்குள் என்ன நடக்கிறது எனத் தெரிய வில்லை. குறைபாடு உள்ளது என்பதை சில தருணங்களில் உணர்கிறேன். நான் கற்றக் கலைகளே அந்த கவலைகளை போக்கி விடுகிறது. அந்த கலைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகத் தான் நானும் தற்போது சிலருக்கு நடனக் கலைகளை கற்றுக் கொடுத்து வருகிறேன். கலைகள் அளிக்கும் ஊக்கம் என்னை உயர்த்தி வருகிறது” என்கிறார். ‘கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ என்று கூற கேட்டிருக்கிறோம். ஏஞ்சலின் ஷெரிலை பார்த்த பின், ‘கலை ஏதேனும் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்’ என்று கூறத் தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x