Published : 24 Jan 2021 03:17 AM
Last Updated : 24 Jan 2021 03:17 AM
ஆவடி, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டில் 1,014 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 234 பேர் உயிரிழந்துள்ளனர் என, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை பெருநகர காவல்துறையின்கீழ் உள்ளது பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு. இப்பிரிவின் எல்லைகளாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் உள்ள அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர், போரூர், திருமுல்லைவாயல், ஆவடி, ஆவடி டேங்க் பேக்டரி, பட்டாபிராம், திருநின்றவூர், முத்தாபுதுப்பேட்டை, பூந்தமல்லி, நசரத்பேட்டை, குன்றத்தூர், மாங்காடு ஆகிய 15 காவல் நிலையங்களின் எல்லை பகுதிகள் உள்ளன. இப்போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 234 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் தெரிவித்ததாவது: பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு எல்லையில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சி.டி.எச். சாலை, தாம்பரம் - புழல் புறவழிச் சாலை, வண்டலூர்- மீஞ்சூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் நாள்தோறும் தொடர்ந்து விபத்துகள் நடக்கின்றன.
அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் இந்த எல்லையில் 1,014 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 234 பேர் உயிரிழந்துள்ளனர்; 780 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், இந்த உயிரிழப்புகளில் 50 சதவீதம் பேர் இருசக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்துகளின் எண்ணிக்கை கடந்த 2019-ம் ஆண்டை விட 521 குறைவு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கடந்த 2019-ம் ஆண்டை விட 74 குறைவு. இதற்கு காரணம், `போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதும், மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள், தலைக் கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள், வாகனப் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதித்து வருவதும், கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்கெனவே கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்கும்தான்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ``பூந்தமல்லி பகுதியில் உள்ள சாலைகள் முறை யாக பராமரிக்கப்படாததும், விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதும் விபத்துகளுக்கு காரணம். மேலும், தாம்பரம் - புழல் புறவழிச் சாலையில் மின் விளக்குகள் இல்லாதது, சாலைகளில் மாடுகள் குறுக்கே செல்வது ஆகியவையும் விபத்து ஏற்பட காரணங்களாகும். எனவே தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சாலைகளை முறையாக பராமரிப்பதோடு, சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT