Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கந்திலி, ஆலங்காயம், திருப்பத் தூர், ஜோலார்பேட்டை, நாட்றாம் பள்ளி மற்றும் மாதனூர் வட்டாரங் களில் தென்னை மரம் மற்றும் தென்னை இளங்கன்றுகளில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் சில இடங்களில் காணப்படுகிறது.
இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் தலைமையில் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் திலகம், வேளாண் உதவி இயக்குநர் ராகிணி, வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கந்திலி வட்டாரத்தில் மட்றபள்ளி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்புகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவ சாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
அறிகுறிகள்
தென்னை இலைகளின் உட் பகுதியில் சுருள், சுருளாக நீள் வட்ட வடிவில் முட்டைகள் காணப் படும். முட்டைகளை மெழுகு போன்ற வெள்ளை நிற துகள்கள் மூடியிருக்கும். இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்கள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன. வெள்ளை ஈக்களால் வெளியேற்றப்படும் தேன் போன்ற திரவம் கீழ்மட்ட அடுக்கு இலைகளின் மேல்பகுதியில் விழுந்து பரவுகின்றன.
இலைகளின் மீது கரும்பூசணம் வளர்வதால் தென்னை ஓலைகள் தற்காலிகமாக கருப்பு நிறமாக மாறிவிடும். ஒளிசேர்க்கை தற்காலிக மாக பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றிவிடும். பாதிக்கப்பட்ட இலைகள் மீது எறும்புகளை காணலாம். வெள்ளை ஈக்களின் தாக்குதலால் மகசூல் பெருமளவு பாதிக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
விளக்கு பொறியை ஓர் ஏக்கருக்கு 2 வீதம் இரவு 7 மணி முதல் 11 மணி வரை வைத்து இரவில் பறக்கும் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். மஞ்சள் நிற ஒட்டு பொறிகளை ஏக்கருக்கு 10 வீதம் 6 அடி உயரத்தில் வைக்க வேண்டும் அல்லது தென்னை மரங்களின் தண்டுப் பகுதியில் மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை 6 அடி உயரத்தில் சுற்றி வைக்க வேண்டும். விசைத் தெளிப்பானைக் கொண்டு மிக வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கலாம். ஈக்கள் தாக்கப்பட்ட மரங்களில் உள்ள கீழ்மட்ட ஓலை களில் உட்பகுதியில் தண்ணீர் படுமாறு தெளிப்பதால் ஈக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
என்கார்சியா ஒட்டுண்ணிகள் விடுதல்
என்கார்சியா ஒட்டுண்ணி குளவி, கூட்டுப்புழு பருவத்தை ஓர் ஏக்கருக்கு 10 வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது 10 மரங்களின் இடைவெளியில் வைத்து கட்டுப் படுத்தலாம். கிரைசோபிட என்ற பச்சை கண்ணாடி இறக்கை பூச்சி இறை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 300 வீதம் தாக்கப்பட்ட மரங்களில் வைத்தும் கட்டுப்படுத்தலாம்.
வெள்ளை ஈக்களால் ஏற்படும் கரும்பூசணத்தை கட்டுப்படுத்த மைதா மாவு பசை கரைசலை ஒரு லிட்டர் தண்ணீரில் 25 கிராம், ஒட்டு திரவம் 1 மில்லி சேர்த்து கீழ் இலை அடுக்குகளில் படிந்திருக்கும் கரும்பூசணங்களின் மேல் நன்றாக படுமாறு தெளிக்க வேண்டும். மைதா மாவு பசை தெளித்த 3 முதல் 5 நாட்களில் இலைகளில் படிருந்திருந்த கரும் பூசணங்கள் வெயிலில் காய்ந்து உதிர்ந்துவிடும்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு வேப்ப எண்ணெய் 10 மில்லி கலந்து தெளித்தும் பூச்சியை கட்டுப்படுத்தலாம். செயற்கை பைரித்திராய்டு மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லிகள் தென்னை மரத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் அழித்துவிடும் என்பதால் அவற்றை முற்றிலும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT