Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM

‘நிவர்’ புயல், வடகிழக்குப் பருவமழை தொடர்பாக காஞ்சி மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை மத்தியக் குழு ஆய்வு

காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்களுக்காக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர். உடன் காஞ்சி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்தியக் குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தலைமையில் ‘நிவர்’புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்தியக் குழு இணை ஆலோசகர் நவல் பிரகாஷ், சார்புச் செயலர் பங்கஜ்குமார், மூத்த ஆலோசகர் அனுஜ் திவாரிஆகியோர் தலைமையில் பருவமழை காலங்களில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்தனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் ஓரமாக குடியிருக்கும் வீடுகளை அப்புறப்படுத்தி, அவர்களுக்கு புதிய வீடுகள் வழங்க பொதுப்பணித் துறையின் மூலம் பயோ மெட்ரிக் கணக்கெடுப்பு நடைபெற்றது.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கீழ்கதிர்பூரில் ரூ.190.08 கோடி மதிப்பீட்டில் 2,112 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தலா ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு குடியிருப்புக்கு 300 லிட்டர் கொள்ளளவு என்ற அடிப்படையில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குடியிருப்பில் 5 மழைநீர் வடிகால் தொட்டிகள், 3 அங்கன்வாடி மையங்கள், 3 நுகர்பொருள் அங்காடிகள், 18 பல்பொருள் அங்காடிகள், ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், ஒரு ஆரம்ப பள்ளிக் கூடம், 3 பால் அங்காடிகள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை பேரிடர் மேலாண்மை மைய மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

பயிர்கள் சேதம்

இதையடுத்து தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்தியக் குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நத்தநல்லூர் கிராமத்தில் விவசாய பயிர்கள் சேதமடைந்தது குறித்து கேட்டறிந்தனர்.

ஆதனூர், சோமங்கலம், வரதராஜபுரம் நீர்தேக்கத் தொட்டி ஆகிய இடங்களில் உள்ள நீர் தேக்கங்களில் ‘நிவர்’ புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்ட சீரமைப்பு பணிகளான கரைகளை பலப்படுத்தும் பணிகள், தூர்வாரி சீரமைக்கும் பணிகள் மற்றும் மழைக்காலங்களில் நீர் வெளியேற்றிட தேவையான பணிகளை தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்தியக் குழுவைச் சேர்ந்த அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x