Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM
தி.மலை அடுத்த அடிஅண்ணா மலை கிராமத்தில் உள்ள மாணிக்க வாசகர் கோயிலில் (கிரிவலப் பாதை) பாண்டியர் கால கல்வெட்டு உள்ள தாக திருவண்ணாமலை மரபுசார் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மரபுசார் அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர்செல்வம் கூறும்போது, “மாணிக்கவாசகர் கோயிலின் கிழக்குப்புற மதில் சுவற்றில் உள்ள கல்வெட்டு மீளாய்வு செய்யப்பட்டது. ஸ்வஸ்த திரிபுவன சக்கரவர்த்திகள் என்ற மெய்க்கீர்த்தியுடன் குறிப்புகள் தொடங்குகிறது. கல்வெட்டில் விக்கிரம சோழ தேவர் என்பவரும், சேதி மண்டலத்து நாட்டார் சபையும் சேர்ந்து நெல் வாய் என்ற ஊழில் உள்ள நிலத்தின் ஒரு பகுதியை, இக்கோயிலில் உள்ள திருப்பெருந்துறை உடையநாயனாருக்கும், மற்றொரு பகுதியை திருவாதவூர் நாயனாருக் கும் தானமாக வழங்கியதை அறியமுடிகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலில் உள்ள இறைவனை திருப்பெருந்துரை உடைய நாயனார் எனவும், மதுரைஅருகே உள்ள திருவாதவூரில் அவதரித்ததால் மாணிக்கவாசகரை திருவாதவூர் நாயனார் எனவும் அழைப்பர். ஆவுடையார் கோயி லில் ஆத்மநாத சுவாமி கோயிலில் உள்ளது போலவே, இந்த கோயிலிலும் மாணிக்கவாசகர் முன்பு ஆவூடையாக சிவபெருமான் காட்சியளிக்கிறார்.
விக்கிரம சோழ தேவர் என்பவர் இரண்டாம் சடையவர்மன் குலசேகரனின் ஆட்சி காலத்தில், உயர் பொறுப்பில் பணியாற்றி யதை, அண்ணாமலையார் கோயி லில் உள்ள முதலாம் சடையவர்மன் விக்கிரம பாண்டியனின் 2-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு(1243) மூலம் அறியமுடிகிறது. மேலும் சேதிராயர்கள் என்பவர்கள், நடுநாடு என்றழைக்கப்படும் திருக் கோவிலூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த சிற்றரச வம்சமாகும். இவர்கள் பற்றிய குறிப்புகளும் அண்ணாமலையார் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. எனவே, சேதிராயர் நாட்டில் உள்ள சபையும் மற்றும் விக்கிரம சோழ தேவர் என்பவரும் இணைந்து நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர்.
கல்வெட்டில் சுந்தரபாண்டியன் என சொல்லப்பட்டிருந்தாலும், பாண்டியர்களின் எந்த சுந்தர பாண்டியன் என மெய்க்கீர்த்தியில் தெளிவான விவரங்கள் குறிப்பிடப் படவில்லை. அதே நேரத்தில், கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்சி ஆண்டு மற்றும் தகவலை ஒப்பிட்டு பார்க்கும்போது, 1238 – 1240-ம் ஆண்டு வரை ஆட்சி புரிந்த இரண்டாம் சடைய வர்மன் குலசேகர பாண்டியனின் தம்பியும், அவருடன் சிறிது காலம் இணை ஆட்சி புரிந்த ‘இரண்டாம் மாற வர்மன் சுந்தர பாண்டியன்’ காலத்திய தானம் என எடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம் அம்மன்னனின் இரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு என்பதால், இதனை கி.பி. 1240-ம் ஆண்டு கல்வெட்டு என தெரியவருகிறது.
சோழப் பேரரசன் மூன்றாம் ராஜராஜனின் சிற்றரசாக விளங்கிய காடவராயன் முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக திருவண்ணாமலை இருந்துள்ளது. அப்போது, மூன்றாம் ராஜராஜனை, சேந்தமங்கலத்தில் கி.பி.1231-ல்சிறை வைத்தபோது, ஹொய் சாலர்கள் உதவியை சோழர்கள் நாட, தன்னை காத்துக் கொள்ள பாண்டியர்களிடம் கோப்பெருஞ்சிங்கன் நட்புறவு கொண்டதால், ராஜராஜன் கால கல்வெட்டுகளுடன் இரண்டாம் மாற வர்மன் சுந்தர பாண்டியன் மற்றும் மாற வர்மன் விக்கிரம பாண்டியன் காலத்துக்கு கல்வெட்டு கள் தி.மலையில் கிடைக்கிறது” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT