Last Updated : 23 Jan, 2021 09:32 PM

1  

Published : 23 Jan 2021 09:32 PM
Last Updated : 23 Jan 2021 09:32 PM

மழையில் சேறு சகதி, வெயில் காலத்தில் தூசு மண்டலம்: நெல்லையில் போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறியுள்ள சாலைகள்- வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி

திருநெல்வேலி

திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மாநகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்து புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

திருநெல்வேலி மாநகரில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதான சாலைகளாகட்டும், மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளாகட்டும் பாதாள சாக்கடை குழிகளையொட்டி உடைப்புகள், குண்டு, குழிகள் இல்லாமல் எந்த சாலையும் இல்லை.

நாட்டில் பொலிவுறு நகரங்களாக மாறவுள்ள பட்டியலில் திருநெல்வேலியும் இடம்பெற்றுள்ள நிலையில் இங்குள்ள சாலைகளின் தரம் குறித்த கேள்வி எழுகிறது.

திருநெல்வேலி டவுனில் முக்கிய சாலைகள் அனைத்தும் போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறியிருக்கின்றன. கடந்த பல மாதங்களாகவே இப்பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, பேட்டைக்கு செல்லும் சாலை, நயினார்குளம் சாலை என்று அத்தனை சாலைகளும் தற்போது புழுதி மண்டலமாக காட்சியளிக்கின்றன.

மழை காலத்தில் இந்த சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறியிருந்த நிலையில் தற்போது வெயில் அடிக்கும்போது சாலைகள் முழுக்க புழுதி கிளம்புகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகளும், லாரிகளுமாக கனரக மற்றும் இலகுரக வாகனங்களும் இந்தச் சாலைகளில் சென்று வருகின்றன. ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களில் ஆட்டோக்களில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஏராளமான 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்த சாலைகளை கடந்து செல்கின்றன. அத்தனை வாகனங்களில் செல்வோரும் புழுதி மண்டலத்தால் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அத்துடன் தார்ச் சாலைகள் என்ற அடையாளமே தெரியாத அளவுக்கு குண்டும் குழியுமாகவும், சாலைகள் மழையில் அரித்து செல்லப்பட்டும் காட்சியளிக்கின்றன.

இந்தச் சாலைகளில் தினமும் சாகச பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், விபத்துகள் நேரிட்டு வருவது குறித்தும் சமூக வலைதளங்களில் பலரும் காட்சிகளையும், கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் காவல்துறையும், போக்குவரத்து துறையும் கவனம் செலுத்தியிருக்கும் நிலையில் இந்த தரமற்ற சாலைகளால் வரும் ஆபத்துகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

பிரதான சாலைகளை அமைப்பதிலும் பராமரிப்பதிலும் நெடுஞ்சாலைத்துறையிடம் பொறுப்பு இருக்கிறது. மாநகரில் பல்வேறு சாலைகளை சீரமைக்கும் பொறுப்பில் மாநகராட்சி நிர்வாகம் இருக்கிறது. மக்கள்படும் அவதியை இந்த துறைகள் கண்டுகொள்கிறதா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்புகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x