Published : 23 Jan 2021 08:23 PM
Last Updated : 23 Jan 2021 08:23 PM
புதுச்சேரி பிரெஞ்சுப் பேராசிரியருக்கு பிரெஞ்சு அரசின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான ரோமன் ரோலன் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பிரெஞ்சுத் தூதரகத்தின் சார்பாக இந்த ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான ரோமன் ரோலன் பரிசினைப் புதுச்சேரி பிரெஞ்சுப் பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகர் பெற்றார். இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த பிரெஞ்சுப் படைப்பைத் தேர்வு செய்து வழங்கப்படும் இந்தப் பரிசுக்கான விழா இன்று மாலை கொல்கத்தாவில் நடைபெற்றது.
பிரான்ஸ் எழுத்தாளர் தஹர் பென் ஜெலூன் எழுதிய பிரெஞ்சு நாவலை ’உல்லாசத் திருமணம்’ எனும் தலைப்பில், புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு ஆய்வு நிறுவனத்தின் பிரெஞ்சுத் துறைத் தலைவர் வெங்கட சுப்புராய நாயகர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதனைச் சிறந்த மொழியாக்க நூலாகத் தேர்வு செய்து, ரோமன் ரோலன் பரிசினைப் பிரெஞ்சுத் தூதரகப் பண்பாட்டுப் பிரிவு உயர் அதிகாரி எமானுவேல் லெபிரன் தமியேன்ஸ் வழங்கி வாழ்த்தினார்.
இப்பரிசு பெறும் மொழிபெயர்ப்பாளர் வெங்கட சுப்புராய நாயகர், பதிப்பாளர் தடாகம் அமுதரசன் ஆகியோர், பிரெஞ்சு அரசின் விருந்தினர்களாக மே மாதம் பாரீஸில் நடைபெற உள்ள உலகப் புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மொழிபெயர்ப்பாளர் ஒரு மாதமும், பதிப்பாளர் ஒரு வாரமும் பிரான்ஸில் தங்கிவர பிரெஞ்சு அரசு ஏற்பாடு செய்துள்ளது. எழுத்தாளர் தஹர் பென் ஜெலூன் இணைய வழியில் கலந்துகொண்டு விழாவில் பேசினார். பாரீஸ் உலகப் புத்தகத் திருவிழாவில் இந்த ஆண்டின் சிறப்பு அழைப்பாளருக்கான நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
பரிசு பெற்ற இந்த மொழியாக்க நூல், கேரளப் பல்கலைக்கழகத்தின் முதுகலைத் தமிழ்ப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பரிசு பெறும் பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகரின் ஏனைய மொழிபெயர்ப்புகளான 'புக்குஷிமா', 'சூறாவளி', 'விரும்பத்தக்க உடல்' ஆகிய நூல்கள் கடந்த ஆண்டுகளில் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகர், குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT