Published : 23 Jan 2021 06:50 PM
Last Updated : 23 Jan 2021 06:50 PM
மாணவர்களின் விடைத்தாளைத் திருத்த மறுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதியை தானாக இழுந்துவிடுவார்கள் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவசாந்தினி. இவர் கோட்டாறு ரோமன் கத்தோலிக்க மறை மாவட்டத்துக்கு உட்பட்ட மேல்பாலை செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார்.
பள்ளி வருகை பதிவேட்டில் கையெழுத்திடவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் தேவசாந்தினி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் அளித்த விளக்கம் ஏற்கப்பட்டு பணியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
பின்னர் திருத்துவபுரம் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, பெங்களூருவில் உள்ள ஆங்கில பயிற்சி கல்வி நிறுவனத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். அவர் 31.7.2013-ல் ஓய்வு பெற இருந்த நிலையில் கல்வியாண்டு முழுவதும் பணிபுரிய அனுமதிக்கப்பட்டார்.
அந்த கல்வியாண்டில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்ல மறுத்ததால் அவரது கல்வி ஆண்டு முழுமைக்கும் வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ஊதிய உயர்வு, ஓய்வூதியம் வழங்காததை எதிர்த்தும், பணி நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும் தேவசாந்தினி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் விளக்கம் ஏற்கப்பட்டு பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பணியிடை நீக்க காலத்தை பணிக்காலமாக கருத வேண்டும். எனவே மனுதாரருக்கு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மனுதாரருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட கல்வியாண்டில் அவர் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்ல மறுத்துள்ளார்.
கல்வியாண்டின் மத்தியில் ஓய்வு பெறுவோருக்கு மாணவர்களின் நலன் கருதி கல்வி ஆண்டு முழுமைக்கும் பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
தவறு செய்வது மனித குணம். மாணவர்கள் செய்யும் தவறை திருத்துவது ஆசிரியர்களின் கடமை.
ஆசிரியர் பணி என்பது புனிதமான பணி. கற்பித்தல் மட்டுமல்லாமல் பிழையை திருத்துவதும் ஆசிரியர்களின் பணிதான். மாணவர்களின் பிழையை திருத்துவது கற்பித்தலில் ஒரு அங்கமாகும்.
மாணவர்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை திருத்த மறுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் என்ற தகுதியை தானாக இழுந்துவிடுவார். எனவே, விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்ல மறுத்ததால் மனுதாரரின் பணி நீட்டிப்பு உத்தரவை ரத்து செய்தது சரியான முடிவு. அதில் தலையிட முடியாது. அது தொடர்பான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT