Published : 23 Jan 2021 05:45 PM
Last Updated : 23 Jan 2021 05:45 PM
என்னை யாரும் விலைகொடுத்து வாங்க முடியாது. அடிமையாக்கவும் முடியாது. பதவி என்பது தோளிலே போட்டுக்கொள்ளும் துண்டுபோன்றது என்று நினைப்பவன் நான் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.
இரண்டு நாட்கள் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணமாக கோவை வந்த முதல்வர் கே.பழனிசாமி நேற்று காலை ராஜவீதியில் இருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து கோவை செல்வபுரம், குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின்போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
''2011-க்கு முன்பு கோவை மாநகரம் எப்படி இருந்தது. 2011-க்குப் பிறகு அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் கோவை மாநகரம் எப்படி இருக்கிறது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். கோவை மாநகரம் தொழில்வளம் மிகுந்த நகரம். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு நிலவியது. மின்சாரம் எப்போது வரும், போகும் என்றே மக்களுக்குத் தெரியாது. இதனால், தொழில்கள் பாதிக்கப்பட்டன. நமக்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றன.
ஆனால், 2011-ல் அதிமுக அரசு பொறுப்பேற்றபின், தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவிலேயே சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பதில் முதன்மை மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. திமுக ஆட்சியைப்போல இங்கே கட்டப்பஞ்சாயத்து கிடையாது. நில அபகரிப்பு கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நில அபகரிப்பு ஏற்படும். கொலை, கொள்ளை, திருட்டு ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு ஆட்சி தேவையா. அந்த நிலை வரக்கூடாது. முன்னெச்சரிக்கையாக இருங்கள். ஏமாந்துவிடாதீர்கள்.
திமுக ஆட்சி ஒரு அராஜக ஆட்சி. அதிமுக ஆட்சியில் ஊழல் நடக்கிறது என ஸ்டாலின் கூறுகிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். 13 திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. எங்களைப் பற்றிப் பேச அவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.
திமுக குடும்பத்துக்காக இருக்கும் கட்சி. எனவே, வாரிசு அரசியலுக்கு வரும் தேர்தலில் முற்றுப்புள்ளி வையுங்கள்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்
தொடர்ந்து கோவை போத்தனூரில் ஜமாத் தலைவர்களுடன் முதல்வர் பழனிசாமி கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசும்போது, "மதச் சண்டை, சாதிச் சண்டை வர இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. எந்தச் சூழலிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். மத்திய அரசு சில சட்டங்களைக் கொண்டுவரும்போது அச்சப்படுகிறார்கள். நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. என்னை யாரும் விலைகொடுத்து வாங்க முடியாது. அடிமையாக்கவும் முடியாது. பதவி என்பது தோளிலே போட்டுக்கொள்ளும் துண்டுபோன்றது என்று நினைப்பவன் நான். நான் உறுதியாகச் சொல்கிறேன். யாரும், யாரையும் மிரட்ட முடியாது. இந்த மண்ணிலே பிறந்த ஒவ்வொருவரும் வாழ உரிமை உண்டு" என்றார்.
கோனியம்மன் கோயிலில் தரிசனம்
தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக இன்று காலை 7.50 மணியளவில் முதல்வர் பழனிசாமி கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர், செல்வபுரத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு குனியமுத்தூர் செல்வதற்கு முன்பாக பேரூர் சென்ற முதல்வர், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT