Published : 23 Jan 2021 05:22 PM
Last Updated : 23 Jan 2021 05:22 PM
கரோனா நிவாரண நிதி வசூல் குறித்து கேள்வி கேட்ட தீயணைப்பு அலுவலர் இடமாறுதல் செய்யப்பட்டது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மானாமதுரையைச் சேர்ந்த நாகராஜன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலராக பணிபுரிந்து வருகிறேன். தீயணைப்புத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் முடிந்தளவு கரோனா நிவாரண நிதி வழங்க அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் தீயணைப்புத்துறை அலுவலர்கள், பணியாளர்களிடம் ஒரு நாள் ஊதியமாக ரூ.20,371 வசூலித்துக் கொடுத்தோம்.
அதன் பிறகு அனைவரின் சம்பளத்திலும் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என உயர் அதிகாரி தெரிவித்தார். ஏற்கெனவே ஒரு நாள் ஊதியத்தை ரொக்கமாக வழங்கிவிட்டதாக தெரிவித்தோம். யாரையும் கட்டாயப்படுத்தி நிவாரண நிதி வசூலிக்கக்கூடாது என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் அனைவரையும் கட்டாயப்படுத்தி விருப்ப விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் தரம் குறைந்த முககவசங்கள், கையுறை வழங்கப்பட்டன.
இவை குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். இதனால் என்னை வேலூர் மாவட்டம் ஆலங்காயம் தீயணைப்பு நிலையத்துக்கு இடமாறுதல் செய்தனர்.
மேலும் என் நடவடிக்கையை கூர்ந்து கவனிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. என்னை தீவிரவாதியைப் போல் நடத்துகின்றனர். எனது இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து, மானாமதுரையில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனு தொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டும், இல்லாவிட்டால் மனுதாரருக்கு சாதகமாக உத்தரவு ஏன் பிறப்பிக்கக்கூடாது என கேட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT