Last Updated : 23 Jan, 2021 03:09 PM

3  

Published : 23 Jan 2021 03:09 PM
Last Updated : 23 Jan 2021 03:09 PM

அமைச்சரின் தலையீட்டால் மாவட்ட வளர்ச்சிக் குழு கூட்டத்தை ரத்து செய்த மதுரை ஆட்சியர்: விளக்கம் கேட்டு சு.வெங்கடேசன் எம்.பி. நோட்டீஸ்

மதுரையில், இன்று நடைபெறவிருந்த மாவட்ட வளர்ச்சிக் குழு கூட்டத்தைத் திடீரென ரத்து செய்திருப்பதால் மாவட்ட ஆட்சியர் மீது ஏன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருக்கிறார்.

மத்திய அரசின் திட்டங்கள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படுகிறதா? பயனாளிகளின் தேர்வு விதிமுறைப்படி நடைபெறுகிறதா? என்று ஆய்வு செய்வதற்காக ஆண்டுக்கு நான்கு முறை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்பது விதி.

இதன்படி இன்று (23-ம் தேதி) மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் திடீரென இந்தக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியரும், குழு உறுப்பினருமான த.அன்பழகன் நேற்று மாலை அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து அந்தக் குழுவின் தலைவரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், "நான் நேரிலும், எழுத்துப்பூர்வமாகவும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் இன்று (23-ம் தேதி) காலை 10 மணிக்கு கூட்டத்தைக் கூட்டுவதாக அழைப்பு தந்தீர்கள்.

அதில் விவாதிக்கப்பட வேண்டிய 126 பக்கங்களைக் கொண்ட திட்ட விவர அறிக்கையையும் கொடுத்துள்ளீர்கள். தலைவர்களும் உறுப்பினர்களும் கூட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில், நேற்று மாலை தாங்கள் தன்னிச்சையாக, எவ்வித அதிகாரமுமில்லாமல் கூட்டத்தை ரத்து செய்துள்ளீர்கள்.

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு விதி 7-ன்படி தலைவரின் ஒப்புதல் இல்லாமல் கூட்டத்தைக் கூட்டவோ, ரத்து செய்யவோ தள்ளிவைக்கவோ இயலாது. கூட்டத்தை நடத்துவதற்கு தாங்கள் தனிப்பட்ட பொறுப்பேற்க வேண்டும் என்றும் விதியில் உள்ளது. ஆகவே, விதிமுறைகளை மீறி, அதிகார துஷ்பிரயோகம் செய்து கூட்டத்தைத் ரத்து செய்துள்ளீர்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் என்ற முறையிலும் என்னைப் பணி செய்யவிடாமல் தடுத்துள்ளீர்கள். திட்ட விதிமுறைகளின்படி மக்களுக்கு பலன்கள் கிடைக்க ஏற்படுத்தப்பட்ட இக்குழுவின் நோக்கத்துக்கு எதிராகச் செயல்பட்டுள்ளீர்கள்.

தங்களின் மேற்கண்ட செயல்கள் அகில இந்திய பணி நன்னடத்தை விதிகள் 1968க்கு எதிரானது. எனவே, தங்களின் மீது ஏன் நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டுவரக் கூடாது? தங்களின் மீது ஏன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கக் கூடாது? என்ற விளக்கத்தை இக்கடிதம் கண்ட ஏழு நாட்களுக்குள் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியது ஏன்? என்று மதுரை மக்களவை உறுப்பினரிடம் கேட்டபோது, "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் சிறப்பு நிதியாக, புதிதாக மதுரை மாவட்டத்துக்கு மொத்தம் 110 கோடி நிதி வந்துள்ளது.

அதில் 97 கோடி ரூபாயை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தன்னுடைய தொகுதிக்கு மட்டுமே கொண்டுபோய்விட்டார். மற்ற 9 தொகுதிக்கும் சேர்த்து 10 கோடி கூட ஒதுக்கப்படவில்லை.

குறிப்பாக மதுரையின் சீனியர் அமைச்சரான செல்லூர் ராஜூவின் தொகுதிக்கு ஒரு பைசா கூட நிதி வரவில்லை. அவருடைய தொகுதியிலும் கிராமங்கள் இருக்கின்றன. ஆக, செல்லூர் ராஜூ உள்ளிட்ட மற்ற 9 தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்காகவும்தான் நான் அந்தக் கூட்டத்தில் பேசவிருந்தேன்.

இதைத் தெரிந்துகொண்டு உதயகுமார் தரப்பினர் கொடுத்த நெருக்கடியால் கூட்டத்தை ஆட்சியர் ரத்து செய்துள்ளார். சட்டப்படி, குழுவின் தலைவரான என்னைக் கேட்காமல் கூட்டத்தைக் கூட்டவோ, ஒத்திவைக்கவோ ரத்து செய்யவோ ஆட்சியருக்கு அதிகாரம் கிடையாது.

அதை மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாலும், அரசுப் பணியாளருக்கான நடத்தை விதிகளை மீறியுள்ளதாலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.

இதற்கு மக்களவை உறுப்பினருக்கு அதிகாரம் உள்ளது. இதுவரையில் யாரும் பயன்படுத்தவில்லை என்பதற்காக அந்த அதிகாரம் எம்.பி.க்கு இல்லை என்று கருதிவிட முடியாது. மக்களுக்காக எனக்குள்ள உரிமை, கடமை அனைத்தையும் பயன்படுத்துவேன்" என்றார்.

ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் உள்ளூர் அமைச்சர்களுக்கும், எம்.பி.க்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் அமைச்சர்கள் தப்பிக்கொள்ள கடைசியில், ஆட்சியரும், மாநகராட்சி ஆணையருமே எம்.பி.யின் கோபத்துக்கு ஆளானார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கருத்தறிய முயன்றோம். விரைவில் அவரது பதில் அறிக்கையாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று செய்தித்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x