Published : 23 Jan 2021 02:50 PM
Last Updated : 23 Jan 2021 02:50 PM
ஓசூர் முத்தூட் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற 7 கொள்ளையர்கள் ஹைதராபாத்தில் சிக்கினர். அவர்கள் பிடிபட்ட சுவாரஸ்யப் பின்னணி வெளியாகியுள்ளது. அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், 7 துப்பாக்கிகள், கத்திகள் கைப்பற்றப்பட்டன.
வங்கியில் கொள்ளை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் நகைகளை அடகு வைத்துப் பணம் பெறுவர். இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று காலை வழக்கம்போல் நிறுவனத்தைத் திறந்த மேலாளர் சீனிவாச ராவ் பணியைத் தொடர்ந்தார். இங்கு ஊழியர்கள் பிரசாத், மாருதி உட்பட பலர் பணியாற்றி வந்தனர். காலை 9.30 மணி அளவில் முகமூடி அணிந்தபடி 6 நபர்கள் திடுதிடுவென்று உள்ளே நுழைந்தனர். அவர்கள் 6 பேரும் கையில் துப்பாக்கி, கத்தி உள்ளிட்டவற்றை வைத்திருந்தனர். அதை வைத்து அங்கிருந்தவர்களை மிரட்டித் தாக்கினர்.
சாமர்த்தியமாக தடயத்தை மறைத்த கொள்ளையர்கள்
நகை அடமானம் வைக்க வந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் என அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டிக் கட்டிப்போட்டனர். வாயில் பிளாஸ்திரி ஒட்டினர். வயதான மூதாட்டி ஒருவரை எதுவும் செய்யாமல் மிரட்டி உட்கார வைத்தனர். இரண்டு பேர் வெளியில் காவல் இருக்க, இருவர் கட்டிப்போட்டவர்களிடம் காவல் இருக்க, மேலாளரிடம் பறித்த கொத்துச்சாவியை எடுத்துக்கொண்டு இருவர் வங்கி லாக்கர் அறைக்குள் சென்று நகைகளைக் கொள்ளையடித்தனர்.
தாங்கள் தயாராகக் கொண்டு வந்திருந்த பெரிய பையில் அவற்றை அடைத்த அவர்கள் அனைவரையும் மிரட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
கொள்ளையர்கள் திட்டமிட்டுக் கையுறை, ஹெல்மெட், முகமூடி உள்ளிட்டவற்றை அணிந்து வந்திருந்தனர். சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற அவர்கள் பறித்துச் சென்ற ஊழியர்களின் செல்போனை போலீஸார் ட்ரேஸ் செய்தனர்.
போலீஸைத் திசைதிருப்பிய செய்கை
ஆனால், அவர்கள் சாமர்த்தியமாக அதைக் கர்நாடக எல்லையில் வீசிவிட்டுச் சென்றனர். கொள்ளையர்களைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் அண்டை மாநிலங்களில் தேடலைத் தொடங்கினர்.
கொள்ளையர்கள் என்னதான் திட்டம் போட்டு திருடினாலும் வேண்டுமென்றே ஊழியர்களின் செல்போனைப் பறித்துக்கொண்டுச் சென்று அதைக் கர்நாடக எல்லையில் போட்டுவிட்டு போலீஸாரைத் திசைதிருப்பிவிட்டுச் சென்றாலும் போலீஸார் வேறு வகையில் விசாரணையைத் தொடங்கினர்.
நகையுடன் போலீஸுக்குத் தகவலையும் எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்
போலீஸாரைத் திசைதிருப்பிவிட்டுச் சென்ற கொள்ளையர்கள் சிக்கிய சுவாரஸ்யமான கதை வெளியாகியுள்ளது. கொள்ளையர்கள் செல்போனை கர்நாடக எல்லையில் வீசினால் போலீஸ் கர்நாடகாவில் தேடுவார்கள் என அங்கிருந்து லாரியில் ஏறி தெலங்கானாவுக்குத் தப்பியுள்ளனர். அங்கிருந்து ஜார்க்கண்ட் தப்பிக்க எண்ணியுள்ளனர். இவர்கள் இதற்காக லாரி ஒன்றைத் தயாராக வைத்துள்ளனர். அதில் பாதுகாப்பான ரகசிய அறை வைத்து அதில் தங்கியபடி தப்பித்துள்ளனர்.
ஆனாலும், தமிழக போலீஸார் அளித்த தகவலின்பேரில் அவர்களை ஹைதராபாத் அருகே தெலங்கானா போலீஸார் மடக்கிப் பிடித்தனர். லாரியை ஆய்வு செய்தபோது லாரியில் யாரும் இல்லை. ஓட்டுநர் மட்டுமே இருந்துள்ளார்.
இதனால் குழம்பிப்போன போலீஸார் லாரியைத் தீவிரமாக ஆய்வு செய்தபோது அதில் ரகசிய அறை இருந்துள்ளது. அதில் கொள்ளையர்கள் 6 பேரும் நகைப் பையுடன் பதுங்கியிருந்துனர். அவர்களை போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 கைத்துப்பாக்கிகள், கத்திகளையும் போலீஸார் கைது செய்தனர்.
கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
திட்டம் போட்டுத் திருடினாலும் கொள்ளையர்கள் சென்ற குறிப்பிட்ட லாரியை அதுவும் யாருமே யோசிக்காத ஹைதராபாத்தில் மடக்கிய போலீஸார் அவர்களைக் கைது செய்தது எப்படி என்பது கொள்ளையர்களுக்கு விசித்திரமாக இருந்தது. ஆனால், சிக்கிய விவகாரம் மிகச் சாதாரணமான ஒன்று.
கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் காட்சிகளை சிசி டிவியில் பார்த்தால் லாக்கரைத் திறக்கும் கொள்ளையன் பேக் செய்யப்பட்ட கவரில் உள்ள நகைகளை கீழே எடுத்துப் போடுவதும், மற்றொரு கொள்ளையன் அதை எடுத்துப் பையில் போடும் காட்சியும் பதிவாகியிருக்கும். பேக் செய்யப்பட்ட நகையில்தான் இருக்கு சூட்சமம்.
நகைப் பையில் கொண்டுசென்ற துப்பு
கொள்ளையர்கள் பேக் செய்யப்பட்ட நகை எனச் சாதாரணமாகக் கருதிய அந்த நகைகளில் இதுபோன்ற திருட்டு நடக்கலாம் என நிறுவனத்தினர் ஜிபிஎஸ் கருவிகளை வைத்திருந்தனர். அதைக் கவனிக்காத கொள்ளையர்கள் காட்டிக்கொடுக்கும் கருவியைத் தங்களுடனே எடுத்துச் சென்றதுதான் வேடிக்கை.
ஜிபிஎஸ் கருவி தெலங்கானாவைக் காண்பிக்க அவர்கள் போகும் பாதையின் முழு தகவலும் போலீஸார் திரையில் தெரிய, ஹைதராபாத் போலீஸாருடன் இணைந்து லைவாக கொள்ளையர்கள் நடமாட்டத்தை அளிக்க ஹைதராபாத் போலீஸார் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கொஞ்சம் தவறியிருந்தாலும் அவர்கள் மாநிலத்தில் போய் பதுங்கியிருப்பார்கள். சரியான நேரத்தில் ஜிபிஎஸ் டெக்னாலஜி அவர்களைப் பிடிக்க உதவி இருக்கிறது. 12 மணி நேரத்தில் கொள்ளையர்களைப் பிடித்த தமிழக போலீஸாரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT