Published : 10 Oct 2015 04:38 PM
Last Updated : 10 Oct 2015 04:38 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலரிப்பினால் மீனவ கிராமங்களும், கிராமங்களுக்கான இணைப்பு சாலைகளும் சேதமாகி வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித் துறைமுகங்கள் அல்லது தூண்டில் வளைவுகள் கட்டப்படும் சமயங்களில் எல்லாம் அதன் அருகில் இருக்கும் கடற்கரை பகுதிகள், ஊர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அந்தவகையில் கடல் அலையால் சொத்தவிளை கடற்கரை சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.
மணக்குடியில் கட்டப்பட்ட மீனவர் ஓய்வு அறையானது கடலுக்குள் செல்லும் நிலையில் உள்ளது. தொலைநோக்கு பார்வை இல்லாததே இதற்கு காரணம் என, மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடலோர சாலை பாதிக்கப் பட்டுள்ளதால் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை பேருந்துகள் மாற்று வழியில் இயக்கப்படுகின்றன. இதனால் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் அழிக்கால் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. அப்போது ஊர் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்பால் வருடம்தோறும் ஏராளமான வீடுகள் சேதமடைகின்றன. மீனவர்களுக்கு மாற்று வீடுகள் கிடைப்பது உறுதியற்றதாக உள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
தெற்கு எழுத்தாளர் இயக்கத் தலைவர் தமிழ்செல்வன் கூறும்போது, ‘கடல் அரிப்பால் கடற்கரை சாலைகள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகின்றன. கடல் தொடர்ந்து நிலப்பகுதியை உள்வாங்கிக் கொண்டு வருவதை வேடிக்கை பார்ப்பது சரியானதல்ல. அதற்கு ஆய்வாளர்களைக் கொண்டு ஆய்வுசெய்து நிரந்தரமான ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், கடலில் இருந்து 200 முதல் 500 மீட்டருக்கு உட்பட்ட பகுதிகளை மீனவர்களின் குடியிருப்புகளுக்கு ஒதுக்க வேண்டும்’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT