Last Updated : 23 Jan, 2021 03:16 AM

 

Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM

ஜே.பி.நட்டா வரும் 29-ம் தேதி புதுச்சேரி வருகை: அதிருப்தி காங்கிரஸ் அமைச்சர், எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவார்களா?

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவரும் 29-ல் புதுவை வரவுள்ள சூழலில் அதிருப்தி காங்கி ரஸ் அமைச்சர் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுவையில் முதல்வர் நாராயணசாமிதலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணிஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி கூட்டணி ஆட்சியை உருவாக்க பாஜக பல்வேறு வியூகங் களை அமைத்து செயல்பட்டு வருகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் சுரானா புதுவை மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள் ளார். மேலும் புதுவையின் 30தொகுதிக்கும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பாளர்களாக நிய மிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஓராண்டாகவே சட்ட மன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. காங்கிரஸ் அரசைகண்டித்து பல்வேறு வகையிலான போராட்டங்களை நடத்தி வருகிறது அதோடு பிறகட்சிகளில் செல்வாக்குள்ள வேட்பாளர் பிரதிநிதி களை தங்கள் பக்கம் இழுக்கும் பணியும் நடக்கிறது. புதுவையின் பிரதான எதிர்க்கட்சியான என்ஆர் காங்கிரஸ், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் கூட்டணி பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.

காங்கிரஸில் உள்ள அதிருப்தி அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தங்கள் கட்சிக்கு இழுத்து அவர்களை வேட்பாளராக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. ஒரு அமைச்சர், 5 எம்எல்ஏக்கள், காங்கிரசின் 10-க்கும்மேற்பட்ட முக்கியப் பிரமுகர்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 29-ம் தேதி மாலை புதுவைக்கு வருகிறார். அன்றிரவு புதுவை மாநிலபாஜக நிர்வாகிகளின் ஆலோ சனைக் கூட்டம் நடக்கிறது. அதில் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். இரவு புதுவையில் தங்குகிறார். மறுநாள் 30-ம் தேதி புதுவை கடலூர் சாலையில் உள்ள ஏஎப்டி திடலில் பாஜக பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஜே.பி.நட்டா சிறப்புரையாற்றுகிறார். பொதுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் காங்கிரஸைச் சேர்ந்த அதிருப்தி அமைச்சர் தலைமையில் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜக வில் இணைய உள்ளதாக கூறப் படுகிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ் வட்டாரங்களோ, “அதிருப்தி அமைச்சர் முதல்வர் பதவியை எதிர்பார்க்கிறார். பல மாதங்களாக அவர் பாஜக செல்ல உள்ளதாக பேச்சு உள்ளது. தற்போது அவரை சமாதானப்படுத்தும் பணியும் நடக்கிறது” என்கின்றனர்.

அதிருப்தி அமைச்சர் தரப்பில் விசாரித்தபோது, “தற்போது அதிருப்தி அமைச்சர் சேலம் அப்பாபைத்தியம் சாமி கோயிலுக்கு சென்றுள்ளார். இறுதி முடிவு எடுக்கும்போது தகவல் தெரிவிப்பார்” என்றே குறிப்பிடுகின்றனர்.

அரசியல் வட்டாரங்களில் விசாரித்ததில், “அதிருப்தி அமைச்சர் பாஜக, காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ் என்று மூன்று தரப்பிலும் பேசி வருகிறார். அவரது இலக்கு முதல்வர் பதவி. கடுமையாக விமர்சித்து வந்த திமுக மீண்டும் காங்கிரஸூடன் கூட்டணி அமைப்பது போல எதுவும் நடக்கலாம்” என்று குறிப்பி டுகின்றனர்.

இதனால் பாஜக தேசிய தலைவர் வரும்போது காங்கிரஸ் அமைச்சர், எம்எல்ஏக்கள் இணைவார்களா என்ற கேள்வியும் நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x