Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM

7 பேர் விடுதலையில் நீதிமன்றத்தின் முடிவை காங்கிரஸ் ஏற்கும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து

ஈரோடு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றம் என்னமுடிவு எடுக்கிறதோ அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை (24-ம் தேதி) தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் ஊத்துக்குளி, பெருந்துறை,ஈரோடு, ஓடாநிலை தீரன் சின்னமலை மணிமண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். எங்களுக்கு 234 தொகுதிகளிலும் போட்டியிட ஆசைதான். அதற்கு சாத்தியமில்லை என்பதும்தெரியும். ஒவ்வொரு கட்சியும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கு, நாங்கள் ஆட்சியை பிடிப்போம், நாங்கள்தான் முதல்வராக வருவோம் என சொல்வது வாடிக்கைதான். அந்த வகையில் புதுச்சேரியில் ஜெகத்ரட்சகன் பேசி இருக்கிறார்.

தமிழக மக்கள் பிரதமர் மோடியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். மோடி மீது அதிருப்தியில் இருக்கின்ற மக்கள், ராகுல்காந்திதான் நமக்கு தலைமை ஏற்க ஏற்றவர் என்ற நிலையில் இருக்கின்றனர். இந்த சூழலில் ராகுல்காந்தியின் தமிழக வருகை நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். சசிகலாவருகையால் அரசியல் எப்படி இருக்கும் என சொல்ல விரும்பவில்லை. அவர்நல்லபடியாக குணம் அடைந்துவர வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x