Published : 22 Jan 2021 09:52 PM
Last Updated : 22 Jan 2021 09:52 PM
இந்தியாவில் தயாராகும் கரோனா தடுப்பூசி அண்டை நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தானிடமிருந்து தடுப்பூசி வேண்டி கோரிக்கை ஏதும் வரவில்லை என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவேக்சின், சீரம் இன்ஸ்டிட்டியூட்டின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை அவசர கால அடிப்படையில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்தது.
இதனையடுத்து தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 16-ம் தேதியன்று இந்தியாவில் கரோனா தடுப்பூசி முதற்கட்டப் பணி தொடங்கியது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டம் என்ற பெருமையுடன் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், மியான்மர், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அவற்றின் வேண்டுகோளுக்கு இணங்கி கரோனா தடுப்பூசிகளை இந்தியா விநியோகித்து வருகிறது.
ஆனால், மற்றுமொரு அண்டை நாடான பாகிஸ்தானிடமிருந்து இதுவரை கரோனா தடுப்பூசியை விநியோகிக்க வேண்டி எவ்வித கோரிக்கையும் வரவில்லை எனத் தெரிகிறது.
இத்தகவலை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்திருக்கிறார்.
கரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தப் போரில் நாம் தயாரித்துள்ள தடுப்பூசிகளின் ஒளி மனிதகுலம் பயன்பெறும் வகையில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
அந்த வகையில் கடந்த 19-ம் தேதியன்று அண்டை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கியது.
முதல் நாளில் பூட்டான் நாட்டுக்கு 1.5 லட்சம் டோஸ்கள் அனுப்பப்பட்டன. மாலத்தீவுக்கு 1 லட்சம் டோஸ்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
நேபாளம், வங்கதேசத்துக்கு தலா 10 லட்சம் டோஸ்களும், வங்கதேசத்துக்கு 20 லட்சம் டோஸ்களும் அனுப்புவதற்கான நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இன்று, மியான்மாருக்கு 15 லட்சம் டோஸ்கள், மொரீஷியஸுக்கு 50,000 டோஸ்கள் வான்வழியாக அனுப்பிவைக்கப்பட்டது.
இதுதவிர ஒப்பந்த அடிப்படையில் சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மொராக்கோ போன்ற நாடுகளுக்கும் தடுப்பூசி அனுப்பிவைக்கப்படுகிறது.
அதேவேளையில் உள்நாட்டுத் தேவைக்கான தடுப்பூசி இருப்பு தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT