Published : 22 Jan 2021 07:57 PM
Last Updated : 22 Jan 2021 07:57 PM
இளையான்குடியில் 40 கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் வைகையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்குரிய தண்ணீரை திறக்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன், கால்நடை பராமரிப்பு இணை இயக்குநர் முருகேசன், தோட்டக்கலை துணை இயக்குநர் அழகுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் விவரம்:
விவசாயிகள் வீரபாண்டி, சந்திரன்: மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர், மிளகாய் பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30 ஆயிரம், வெங்காயத்திற்கு ரூ.70 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஆட்சியர்: சிவகங்கை மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. நன்செய்யாக இருந்தால் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம், புஞ்செய்யாக இருந்தால் ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதுவரை 7,869 விவசாயிகளுக்கு ரூ.4.48 கோடி நிவாரணமாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் ஆதிமூலம், அய்யாச்சாமி: பயிர் கடனை தள்ளுபடி செய்யும் தீர்மனத்தை இக்கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும்.
இளையான்குடி பகுதியில் 40 கண்மாய்கள் நிரம்பாமல் உள்ளன. வைகை அணையில் சிவகங்கை மாவட்டத்திற்குரிய நீரை திறக்க வேண்டும்.
ஆட்சியர்: அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
விவசாயி கோவிந்தராஜன்: உப்பாற்றில் தண்ணீர் சென்றும் கால்வாய் சீரமைக்காததால் செய்களத்தூர் கண்மாய்க்கு தண்ணீர் வரவில்லை.
ஆட்சியர்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பர்.
பரம்புமலை போராட்டக்குழுத் தலைவர் கர்ணன்: பிரான்மலையில் கல்குவாரிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT