Published : 22 Jan 2021 05:16 PM
Last Updated : 22 Jan 2021 05:16 PM
குமரி மாவட்ட வனப்பகுதியை ஒட்டி 3. கி.மீட்டர் தூரத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்ததை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த லாலாஜி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
குமரி மாவட்டத்தில் வன உயிரின சரணாலயத்தை சுற்றி சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைப்பது தொடர்பான அறிவிப்பாணை மத்திய அரசின் அரசிதழில் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் குமரி மாவட்டத்தில் வனப்பகுதியிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் மிளகாய், ரப்பர், தேயிலை, காபி விளைவிக்கப்படுகிறது. இந்த விவசாயம் மாவட்டத்தில் நடைபெறும் விவசாயத்தில் முக்கி பங்கு வகிக்கிறது.
வனப்பகுதியிலிருந்து 3 3 கி.மீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தால் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் நடைபெற்றும் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படும்.
இந்த அறிவிப்பாணை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் கரோனா காலத்தில் நடைபெற்றதாலும், அறிவிப்புகள் இந்தி, ஆங்கில மொழிகளில் இருந்ததாலும் பாதிப்புகள் மக்களுக்கு உடனடியாக தெரியவரவில்லை. இந்நிலையில் அரசிதழில் வெளியிடப்பட்டது.
எனவே, குமரி மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து 3 கிலோமீட்டர் வரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கபட்டதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.9-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT