Published : 22 Jan 2021 05:07 PM
Last Updated : 22 Jan 2021 05:07 PM
தலைமைச் செயலகத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டுதல் பின்பற்றப்படாமல் மீறப்படுவதால் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுகிறது. வழிகாட்டு நடைமுறைகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். முகக்கவசம் அணியாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோவிட் தொற்றுப் பரவல் காரணமாக 9 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தாலும் அரசின் தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளி போன்றவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
கோவிட் தொற்று குறைந்தாலும் முழுமையாக நீங்காத நிலையில், உருமாறிய கரோனா வைரஸ் தாக்கம் பரவி வருகிறது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் முகக்கவசம் அணிவதில்லை, சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், தமிழகம் முழுவதுமிருந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் வர உள்ளனர். சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை எடுக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், தலைமைச் செயலகத்துக்கு வரும் பொதுமக்கள், அரசாங்க அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்தே வர வேண்டும். அவ்வாறு அணியாமல் வருபவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
முகக்கவசம் அணியாமல் ஊழியர்கள் பணியாற்றுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் பிறப்பித்துள்ளார். மேற்கண்ட உத்தரவை தவறாது கடைப்பிடிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT