Published : 22 Jan 2021 01:56 PM
Last Updated : 22 Jan 2021 01:56 PM
இலங்கைக் கடற்படை தாக்குதலால் கடலில் மூழ்கி உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடந்த 18.01.2021 திங்கட்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், ஆரோக்கியஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரின் மகன் மெசியா, மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்த நிக்சன் டார்வின் என்பவரது மகன் சாம்சன் டார்வின், வட்டான்வலசை கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் நாகராஜ், தாத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் செந்தில்குமார் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்வதற்காக தங்களது கடற்படை ரோந்துப் படகில் துரத்தியபோது மீனவர்களின் படகில் கடுமையாக மோதியதில் படகு மூழ்கி நான்கு மீனவர்களும் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இதைனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த மீனவர்கள் நான்கு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கிட உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன் ஆகியோர் இலங்கைக் கடற்படையின் தாக்குதலினால் உயிரிழந்த ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களது குடும்பத்தாரிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வெள்ளிக்கிழமை வழங்கி ஆறுதல் கூறினார்கள்.
இந்நிகழ்வுகளின் போது, மீன்வளத் துறை துணை இயக்குநர் பருதி இளம்வழுதி உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT