Published : 30 Oct 2015 07:55 PM
Last Updated : 30 Oct 2015 07:55 PM
காவலர்கள் உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதற்காக தமிழகத்தில் 200 காவல் நிலையங்களில் உடற்பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் தொடங்கின.
காவல் துறையில் புதிதாக பணியில் சேருபவர்களுக்கு முதல் 6 மாத காலம் தினமும் கடுமையான உடற்பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால் அவர்களின் உடல் வலிமை பெறுவதுடன் கட்டுக்கோப்பாகவும் மாறும். ஆனால், பணிக்குச் சேர்ந்த பிறகு ஆர்வமின்மை, உடல் சோர்வு, நேரமின்மை போன்ற பல காரணங்களால் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில்லை.
இதனால் காவலர்களுக்கு வெகுவிரைவில் உடல் பருமன் அதிகரிக்கிறது. மேலும், பலருக்கு ரத்த அழுத்தம், மூட்டுவலி, நீரிழிவு நோய் மற்றும் சுவாசம் தொடர்புடைய நோய்களும் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்கவும், காவலர்கள் உடலைக் கட்டுக்கோப்பாகப் பராமரிப்பதற்கும் அந்தந்த காவல் நிலையங்களிலேயே உடற்பயிற்சி மையங்களை அமைத்துத் தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக நடப்பாண்டில் ஊரக பகுதியிலுள்ள 200 காவல் நிலையங்களில் உடற்பயிற்சி மையம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மேற்கு, மத்திய, தெற்கு, வடக்கு ஆகிய 4 மண்டலங்களிலும் இருந்து தலா 50 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் உடற்பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகள் தற்போது வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுபற்றி காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: தேர்வு செய்யப்பட்டுள்ள 200 காவல் நிலையங்களிலும் தற்போதுள்ள கட்டிடத்தின் ஒரு பகுதியிலேயே இந்த உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. அதில் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீரான பயிற்சி அளிப்பதற்கு தேவையான லெக் பிரஸ், வெயிட் பெஞ்ச் பிரஸ், அப்டமன் கிங், 4, 6, 7 அடி நீளமுள்ள வெயிட் லிப்டிங் ராடுகள், அதில் பொருத்துவதற்காக பல்வேறு கிலோ எடையுடைய பிளேட்டுகள், தம்பிள்ஸ் உள்ளிட்ட 16 வகையான உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இவற்றுடன் 5 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட தலா 2 கண்ணாடிகளும் அந்த அறைகளில் பொருத்தப்பட உள்ளன. உபகரணங்களை கொள்முதல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. மிக விரைவில் இந்த உடற்பயிற்சி மையங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்றனர்.
உடற்பயிற்சி மையங்கள் அமைப்பதற்காக மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் சமயபுரம், மண்ணச்சநல்லூர், துறையூர், சோமரசம்பேட்டை, மணப்பாறை, திருவெறும்பூர் (அனைத்து மகளிர்), லால்குடி, முசிறி ஆகிய 8 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் 7, பெரம்பலூர் மாவட்டத்தில் 3, அரியலூர் மாவட்டத்தில் 4, கரூர் மாவட்டத்தில் 4, தஞ்சை மாவட்டத்தில் 10, திருவாரூர் மாவட்டத்தில் 7, நாகை மாவட்டத்தில் 7 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT