Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM

கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா? - தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

திருநெல்வேலி

மத்திய பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் 3,850 கி.மீ அளவில் இருப்புப்பாதை வழித்தடங்கள் உள்ளதாக கடந்த 2019-ல் கணக்கிடப்பட்டிருந்தது. தமிழக மக்கள் தொகை மற்றும் பரப்பளவை (1,30,058 சதுர கி.மீ.) ஒப்பிடும் போது 3,850 கி.மீ வழித்தடம் மிகவும் குறைவு ஆகும். மக்கள்தொகை அடர்த்தியைப் போல் ரயில் அடர்த்தியையும் கணக்கிடுகின்றனர்.

1,000 சதுர கி.மீ பரப்பளவில் எவ்வளவு இருப்புப் பாதைகள் உள்ளன என்பதை கொண்டே ரயில் அடர்த்தி கணக்கிடப்படுகிறது. தமிழகத்தில் தற்போது ரயில் அடர்த்தி 32.07 ஆக உள்ளது. இதை படிப்படியாக 50 வரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது.

உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, பிஹார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தை விட முன்னிலையில் உள்ளன. குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு புதிய இருப்புப்பாதை திட்டத்தையாவது செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று பயணிகள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த மத்திய பட்ஜெட் வரும் 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தூரம் பாதியாக குறையும்

கன்னியாகுமரியில் தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி வரையிலான இந்த ரயில் பாதை திட்டத்தால் தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் என்று பயணிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி பி.எட்வர்ட் ஜெனி கூறியதாவது:


கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும்போது தூத்துக்குடி துறைமுகம் நேரடியாக ரயில் வழிப்பாதை மூலம் இணைக்கப்பட்டு விடும். இதனால் பின்தங்கிய இப்பகுதியில் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும்.

தற்போது கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயிலில் செல்ல நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக 136 கி.மீ பயணித்து சுற்றுப்பாதையில்தான் செல்ல முடியும். கிழக்கு கடற்கரை ரயில்பாதை அமைக்கப்பட்டால் பயணதூரம் 70 கி.மீ மட்டுமே ஆகும். இப்புதிய ரயில்வே இருப்புப்பாதை தடம் அமைக்க 2008-09-ம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆய்வுப்பணி முடிவடைந்து திட்ட மதிப்பீட்டை ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே சமர்ப்பித்துவிட்டது.

காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு கிழக்கு கடற்கரைப் பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய ரயில்பாதை அமைக்க ஆய்வுப் பணி நடைபெற்றது. இதில் 214.81 கி.மீ தூரம் ரயில்பாதை அமைக்க ரூ. 879 கோடி தேவைப்படும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபோல் கன்னியாகுமரியிலிருந்து தூத்துக்குடி வழியாக ராமநாதபுரம் வரை 247.66 கி.மீ தூரத்துக்கு ரயில்பாதை அமைக்க ரூ.1,080 கோடி தேவைப்படும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 34 ரயில் நிலையங்கள் அமைக்கவும் உத்தேசித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வாரியம் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற ஆய்வறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால், கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தென்மாவட்ட வளர்ச்சிக்காக மீண்டும் ஆய்வு மேற்கொண்டு, இத்திட்டத்தை செயல்படுத்த சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தென்மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசிடம் இதை வலியுறுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x