Published : 21 Jan 2021 09:44 PM
Last Updated : 21 Jan 2021 09:44 PM
தமிழகம் எங்கே வெற்றி நடை போடுகிறது என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
காலையில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதிக்காக திமுக பாக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி கந்தசாமிபுரம், லெவிஞ்சிபுரம், ராஜகோபால் நகர் ஆகிய மூன்று இடங்களில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி பேசியதாவது:
ஏற்கெனவே நடைபெற்ற தேர்தல்களுக்கும், விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
தமிழகத்தின் மிகப்பெரும் ஆளுமைகளாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நம்மிடம் இல்லை. நமக்கு எதிர்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக கட்சியாக இருக்கிறதா, உடையப் போகிறதா என்பது தெரியவில்லை. அவர்கள் எந்த நிலையில் தேர்தலை சந்திக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
மறுமுனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர் இல்லாத நிலையில் நாம் தேர்தலை சந்திக்கிறோம். இந்தத் தேர்தலில் நாம் சந்திக்க வேண்டியது அதிமுகவை மட்டுமல்ல. நம்முடைய கொள்கை, பண்பாட்டு, கலாச்சாரம், அடிப்படை விசயங்கள் அனைத்தையும் உடைந்து விடவேண்டும் என நினைக்கும் பாஜகவையும் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது.
தமிழகத்தை அதிமுக ஆட்சியில் எல்லா இடங்களிலும் ஊழல் மலிந்துவிட்டது. எந்த வளர்ச்சி திட்டங்களும் கிடையாது. முதியோர் உதவித்தொகை வழங்க கூட பணம் இல்லை. ஆனால், பத்திரிக்கைகளில் 'வெற்றி நடைபோடுகிறது தமிழகம்' என்று முழுப்பக்க விளம்பரம் போடுகிறார்கள். தமிழகம் எங்கே வெற்றி நடைபோடுகிறது என தெரியவில்லை. விளம்பரம் மூலம் மக்கள் வரி பணத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களிடம் தமிழகத்தை அடகு வைத்துள்ளார்கள். இந்த தேர்தலில் நாம் தமிழகத்தை மீட்டு எடுக்க வேண்டும். நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம், அதில் சந்தேகமில்லை.
ஆனால், யாரொல்லாம் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதை நன்கு புரிந்து செயல்பட வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் இவர்கள் நடத்தும் சூழ்ச்சிகள், பொய் பிரசாரங்களை நாம் முறியடித்து விழிப்போடு பணியாற்ற வேண்டும்.
தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்லவேண்டிய கடமை நமக்கு உள்ளது. மறுபடியும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கலைஞர் ஆட்சியை உருவாக்கி காட்டுவோம் என்றார் கனிமொழி.
முன்னதாக மேலாத்தூர் பகுதியைச் சேர்ந்த இந்திரா, கோவில்பட்டியை சேர்ந்த பழனி ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கு தனது சொந்த நிதியிலிருந்து இருசக்கர வாகனங்களை கனிமொழி எம்பி வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT