Published : 21 Jan 2021 09:28 PM
Last Updated : 21 Jan 2021 09:28 PM
மதுரை திருமலைநாயக்கர் மகாலில் மத்திய தொல்லியல்துறை அனுமதியில்லாமல் ஸ்மார்ட் சிட்டி சார்பில் பூங்கா கட்டுமானப்பணி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மொழி, பண்பாடு, கலை மற்றும் வரலாறு அடிப்படையில் தமிழகம் மிக தொன்மையான மாநிலமாக திகழ்கிறது. அதனால், தொல்லியல் சிறப்புகளை வெளிப்படுத்தவும், ஆய்வு செய்யவும், பாதுகாக்கவும் தொல்லில்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த துறை மத்தியதொழில்லியல்துறை வழிகாட்டுதல்கள் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள அனைத்து தொல்லியல்துறை நினைவு சின்னங்களையும் பாதுகாக்கிறது.
மதுரை மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிகப்பட்சமாக தொல்லியல்துறையின் 16 நினைவு சின்னங்கள் உள்ளன. இதில் திருமலை நாயக்கர் மகால் முக்கியமானது. இன்றைய நிபுணத்துவம் வாய்ந்த கட்டுமான பொறியாளர்கள் கூட நினைத்துப்பார்க்க முடியாத கட்டிடக்கலை வடிவமைப்பில் இந்த மகால் கட்டப்பட்டுள்ளது.
இந்த மகால் வளாகம் சமீபத்தில் மதுரை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.3.25 கோடியில் அழகுப்படுத்தியுள்ளது. புல்வெளி பூங்கா, மலரும், மலராத அழகு செடிகள், காபிள் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மதுரை மாநகராட்சி மத்திய தொல்லியல்துறை அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மதுரை எம்பி.சு.வெங்கடேசன், கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக்குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு கூறி புது சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்பி கூறுகையில், ‘‘மத்திய, மாநில அரசு தொல்லியல்துறைகளால் பாதுகாக்கப்படும் நினைவுச்சின்னங்களில் இருந்து 100 மீட்டருக்குள் எந்த பராமரிப்பு பணியும் மேற்கொள்ளக்கூடாது.
அப்படியே பராமரிப்பு செய்தாலும் அதன் தொன்மையும், பராம்பரியமும் மாறால் பராமரிக்க வேண்டும். எந்த ஒரு புதிய கட்டிடமும் கட்டக்கூடாது என்ற தொல்லியல்துறை விதிமுறைகள் உள்ளன.
மகால் அருகே உள்ள குடியிருப்புகளில் கூட கட்டுமானப்பணி மேற்கொள்வதற்கு மாநில தொல்லியல்துறையின் தடையில்லா சான்று பெற வேண்டும்.
ஆனால், தொல்லியல்துறை அனுமதியே பெறாமல் தொல்லியல்துறை நினைவுசின்னமான மகாலில் சுற்றுலாத்துறை புதிய கட்டிடங்களும், பூங்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதை தொல்லியல்துறை அதிகாரிகளும் கண்டும், காணாமல் உள்ளனர், ’’ என்றார்.
இதுகுறித்து மகால் தொல்லியல்துறை துணை இயக்குனரிடம் கருத்து கேட்க பல முறை முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
மாநகராட்சி ஆணையாளர் விசாகனிடம் கேட்டபோது, ‘‘மகாலில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி நான் வருவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்போதுள்ள ஆணையாளர் அனுமதி பெற்றாரா? என்பது தெரியவில்லை, ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT