Published : 21 Jan 2021 08:42 PM
Last Updated : 21 Jan 2021 08:42 PM
மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாக மினி கிளினிக் பணியாளர்கள் நியமனம் நடைபெற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரம் சந்தோஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 2000 மினி கிளினிக்கள் திறக்கப்படுகின்றன. இந்த கிளினிக்களில் பணிபுரிய செவிலியர்கள், பல்நோக்கு பணியாளர்களை தனியார் ஏஜென்சி மூலம் தேர்வு செய்ய தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மினி கிளினிக்களுக்கு செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், கரோனா தொற்று காலத்தை கருத்தில் கொண்டு ஒரு ஆண்டுக்கு மட்டுமே மினி கிளினிக்கள் திறக்கப்படுகின்றன. இந்த கிளினிக்குகளில் பணிபுரிய மருத்துவர்கள், பணியாளர்கள் தற்காலிகமாகவே தேர்வு செய்யப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதிடுகையில், 2000 மினி கிளினிக்குகளுக்கான மருத்துவ பணியாளர் நியமனம் என்பது தற்காலிகமாகவே நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய சுகாதார மையத்தின் வழிகாட்டலின் அடிப்படையில், மாவட்ட சுகாதார மையங்கள் வழியாகவே நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. உரிய விதிகளுக்குட்பட்டே நியமனங்கள் நடைபெறுகின்றன என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கரோனா பரவல் அவசர காலத்தை கருத்தில் கொண்டே அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது போல் மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகவே மினி கிளினிக் மருத்துவ பணியாளர்கள் நியமனம் நடைபெற வேண்டும். தனியார் நிறுவனங்கள் மூலம் நியமனங்கள் நடைபெற்றிருந்தால் அந்த நியமனங்கள் செல்லாது என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT