Published : 21 Jan 2021 08:04 PM
Last Updated : 21 Jan 2021 08:04 PM
சாலை விபத்துகளில் உயிரிழப்பு நேரிடுவதற்கு ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் அணியாததுதான் முக்கியக் காரணமாக உள்ளது என்று திருச்சி மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தெரிவித்தார்.
32-வது சாலைப் போக்குவரத்து மாதத்தையொட்டி, சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தித் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தலைக் கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி மகளிர் பங்கேற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் போலீஸார் உட்பட ஏராளமானோர் மகளிர் கலந்து கொண்டனர்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் செல்லும் புதிய சாலையில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் ஆகியோர் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். தலைமை அஞ்சல் நிலையம், ஒத்தக்கடை, கன்டோன்மென்ட் வழியாகச் சென்று எம்ஜிஆர் சிலை அருகே பேரணி நிறைவடைந்தது.
முன்னதாக, ஆட்சியர் சு.சிவராசு கூறும்போது, சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதால் தமிழ்நாட்டில் பெருமளவில் விபத்துகள் குறைந்துள்ளன. கரோனா ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து இல்லாத நிலையில், கடந்த 6 மாதங்களில் தமிழ்நாட்டில்தான் விபத்துகள் எண்ணிக்கை குறைவு. விபத்துகள் குறைவான மாநிலமாகத் தொடர்ந்து 3 ஆண்டுகளாகத் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றார்.
ஆட்சியரைத் தொடர்ந்து, மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் கூறியதாவது:
''திருச்சி மாநகரில் 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020-ம் ஆண்டில் 17 சதவீத விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது. உயிரிழப்பு அல்லாத பொதுவான வாகன விபத்து 25 சதவீதம் குறைந்துள்ளது. விபத்து உயிரிழப்புகளைத் தவிர்க்க வேண்டுமெனில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட்டும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் சீட் பெல்ட்டும் அணிய வேண்டும். ஏனெனில், விபத்துகளில் உயிரிழப்பு நேரிடுவதற்கு ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் அணியாதது முக்கியக் காரணமாக உள்ளது.
திருச்சி மாநகரில் கடந்தாண்டு விபத்துகள் நேரிட்ட 18 இடங்களைக் கண்டறிந்து, அந்த இடங்களில் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
விபத்துகளைக் குறைக்கும் வகையில் சிசிடிவி கேமரா மூலம் சாலைப் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.
திருச்சி மாநகரில் 1,031 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அனைத்து கேமராக்களும் நல்ல முறையில் இயங்கி வருகின்றன. மேலும், மாநகரில் அனைத்துக் காவல்துறை சோதனைச் சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த மாவட்ட ஆட்சியர் நிதி ஒதுக்கியுள்ளார்.
இதுமட்டுமின்றி வாகனப் பதிவெண்ண பதிவு செய்யும் தானியங்கி கேமராவைப் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் குற்ற நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களை எளிதாகக் கண்டறியவும், விரைவாகப் பிடிக்கவும் வாய்ப்பு ஏற்படும். சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக ஏர் ஹாரன்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்''.
இவ்வாறு காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT