Published : 21 Jan 2021 07:38 PM
Last Updated : 21 Jan 2021 07:38 PM
தமிழகம் முழுவதும் கூட்டுறவு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
இதுகுறித்து கோவில்பட்டியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தமிழகம் முழுவதும் உள்ள 2.07 லட்சம் ரேஷன் கார்டுகளில் 2.05 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது 98.50 சதவீதம் வழங்கி விட்டோம். மீதமுள்ள 2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டும். பீக் அவர்ஸ் என்று சொல்லப்படுகிற நேரத்தில் சர்வர் வேகம் குறைந்து விடுகிறது. மற்றபடி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் கால தாமதம் ஏதுமில்லை.
ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் இன்று மட்டுமா நாள் குறிக்கிறார். அவர் கூறத்தொடங்கி 3 பொங்கல் பண்டிகைகள் முடிந்துவிட்டன. இனி அவர் வரப்போவதுமில்லை. நாங்கள் நினைத்திருந்தால் ஒரு நொடியில் எனக் கூறியுள்ளார். திராட்சைப் பழத்தைப் பறிக்க எண்ணி முடியாமல் போன நரி இந்தப் பழம் புளிக்கும் என்பதை போல் அவர் பேசுகிறார்.
சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, அங்கிருந்து சட்டையை கிழித்துக்கொண்டு ஸ்டாலின் சென்றார். எங்கள் சபாநாயகர் வயதானவர். அவரது இருக்கையில் போய் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர் ரெங்கநாதன் உள்ளிட்ட சிலர் போய் அமர்ந்தனர்.
இவர்கள் சட்டத்தை மதிக்கிறவர்களா? இல்லை இதனை இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று ஸ்டாலின் செய்தாரா?. இதனை நீங்கள் ஸ்டாலினிடம் கேட்க வேண்டும்.
கூட்டுறவு துறையில் தொடக்க கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது. பணியாளர்களை முறையாக தேர்வு செய்து வருகிறோம். விரைவில் இந்த பணிகள் முடிக்கப்படும். ரேஷன் கடை பணியாளர்களுக்கான நேர்காணல் முடிந்துள்ளது. விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் உள்ள 4500 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் மைக்ரோ ஏ.டி.எம். கொண்டு வரப்போகிறோம். அதன் மூலமாக தான் பயிர் கடன்களை வழங்க உள்ளோம்.
விவசாயிகள் அவரது ஊரில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் அவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்ற வாய்ப்பை ஏற்படுத்த உள்ளோம்.
ரேஷன் கடை பணியாளர்கள் தொகுப்பூதியம் பெற்று வந்தனர். 2010-ல் திமுக ஆட்சியின்போது, காலமுறை ஊதிய வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படும் என சட்டம் கொண்டு வந்தனர்.
ஆனால் அவர்கள் செயல்படுத்தவில்லை. அதனை நடைமுறைப்படுத்தியது அதிமுக ஆட்சி. ரேஷன் கடை பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் மகிழ்ச்சியடையும் அளவிலான செய்தியை முதல்வர் அறிவிப்பார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT