Published : 21 Jan 2021 07:28 PM
Last Updated : 21 Jan 2021 07:28 PM
வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தக்கூடிய நிலை தமிழகத்தில் இல்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் இல்லத்துக்கு இன்று மக்களவை உறுப்பினர் கனிமொழி வந்தார். அவர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சட்டப்பேரவை தொகுதி திமுக பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
இதில், கனிமொழி எம்.பி. சட்டப்பேரவை தேர்தலில் திமுக நிர்வாகிகள் பணியாற்றுவது குறித்து அறிவுரை வழங்கி பேசுகையில், ”தமிழக அரசின் முடிவுகளை டெல்லியில் கேட்டு தான் முடிவெடுக்கின்றனர்.
அதிமுக கட்சிக்குள் எடுக்க வேண்டிய முடிவுகளையும் டெல்லியில் அமித் ஷா, மோடியிடம் கேட்டுத்தான் எடுக்க வேண்டிய நிலையில் நீங்கள் உங்களை வைத்துக்கொண்டுள்ளீர்கள்.
இப்படிப்பட்ட சுயமரியாதை இல்லாத ஆட்சி நமக்கு தேவையா என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எந்தத் திறமையும் கிடையாது. எந்தவொரு வளர்ச்சித் திட்டங்களையும் புரிந்து கொண்டு செயல்படுத்தக்கூடிய நிலை தமிழகத்தில் இல்லை.
இந்த ஆட்சி மறுபடியும் வந்துவிட்டால், தமிழ் மக்களை, தமிழகத்தை யாரும் காப்பாற்ற வேண்டும். இதனை மக்கள் உணர்ந்துள்ளனர்.
மறுபடியும் இந்த ஆட்சியை சகித்துக்கொள்ள, பொறுத்துக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. அதை செயல்படுத்திக் காட்ட வேண்டிய கடமை உங்களிடம் உள்ளது.
மக்கள் தேர்தலில் அதிமுக எதிராக வாக்களிக்க தயாராக உள்ளனர். அவர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டிய கடமை உங்களுடையது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லக்கூடிய இடங்கள், நாங்கள் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் மக்களின் எழுச்சியை பார்க்கும்போது, நிச்சயமாக திமுக வெற்றி பெற்றுவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
நம்மை எதிர்த்து தேர்தல் பணியாற்றுவது அதிமுக மட்டுமல்ல. இந்தத் தேர்தல் திமுகவை நேருக்கு நேராக எதிர்த்து போரிடக்கூடியவர்கள் மட்டும் இந்த தேர்தல் களத்தில் இல்லை.
அவர்களுக்கு பின்னால் நிற்கக்கூடியவர்கள் எதையம் செய்து, மக்களை பிரித்து சாதி, மதம் போன்ற பொய் பிரச்சாரங்களையே தங்களது தேர்தல் வியூகங்களாக வகுத்து செயல்படக்கூடியவர்கள். அதை நாம் புரிந்து கொண்டு தேர்தல் பணியாற்ற வேண்டும்.
முக்கியமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். இதற்கு நாம் பதிலளிக்க வேண்டியது நமது கடமை”என்றார்.
தொடர்ந்து வள்ளுவர் நகரில் உள்ள கடலைமிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சென்ற கனிமொழி எம்.பி. தொழிலாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் மந்தித்தோப்பில் திருநங்கைகள் நிர்வாகிக்கும் பால் பண்ணையை பார்வையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடினார்.
மாலையில் கோவில்பட்டி கிருஷ்ண நகரில் உள்ள அரசு ஹாக்கி மைதானத்தில் பயிற்சி பெறும் ஹாக்கி வீரர்களை சந்தித்து பேசினார். மேலும், 450 வீரர்களுக்கு ஹாக்கி மட்டைகளை வழங்கினார்.
பின்னர் கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் நடந்த பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி. பேசினார். அங்கு நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து கடம்பூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சிகளில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன், ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், விவசாய தொழிலாளர் அணி மாநில அமைப்பாளர் சுப்பிரமணியன், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர் சூர்யராஜ், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராமர், துணை அமைப்பாளர் சந்தனம், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சின்னப்பாண்டியன், கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT