Published : 21 Jan 2021 06:27 PM
Last Updated : 21 Jan 2021 06:27 PM
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி, 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மூன்று நாட்கள் கோவை உள்ளிட்ட 5 மேற்கு மண்டல மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவை உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். ராகுல் காந்தி எம்.பி.யின் நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:
மூன்று நாட்கள் பிரச்சாரத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி ஈடுபடுகிறார்.
அதாவது, 23-ம் தேதி காலை 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் ராகுல், தனி விமானம் மூலம் 11 மணிக்குக் கோவை வருகிறார். 11.10 முதல் 11.30 மணி வரை கோவை விமான நிலையம்- அவிநாசி சாலை சிட்ரா சந்திப்புப் பகுதியில் கட்சியினர் அளிக்கும் வரவேற்பை ஏற்றுக் கொண்டு பேசுகிறார். பின்னர், 11.35 மணி முதல் 2.45 மணி வரை காளப்பட்டியில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் குறு, சிறு தொழில் துறையினரைச் சந்தித்து அவர்களுடன் உரையாடுகிறார்.
திருப்பூர், ஈரோடு செல்கிறார்
அன்று மதியம் 3.30 மணிக்கு திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்குச் செல்கிறார். அவிநாசி, அனுப்பர்பாளையத்தில் கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார். பின்னர், திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, அன்று மாலை 5.45 மணி முதல் 6.45 மணி வரை திருப்பூர் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் தொழில்துறையினருடன் கலந்துரையாடல் நடத்துகிறார். இரவு திருப்பூரில் தங்குகிறார். 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஊத்துக்குளியில் கட்சியினர் வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார்.
பின்னர் ஈரோடு மாவட்டத்துக்குச் செல்லும் ராகுல், பெருந்துறை, பி.எஸ்.பார்க் பகுதிகளில் கட்சியினர் அளிக்கும் வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார். மதியம் 1.15 மணிக்கு ஓடந்துறையில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், மதியம் நெசவாளர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். மதியம் 3.45 மணிக்கு திருப்பூர் மாவட்டத்துக்குச் செல்லும் ராகுல், காங்கேயத்தில் கட்சியினர் வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார். தாராபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசுகிறார். இரவு அங்கேயே தங்குகிறார்.
கரூர், திண்டுக்கல் பயணம்
25-ம் தேதி கரூர் மாவட்டத்துக்குச் செல்லும் ராகுல் காந்தி சின்ன தாராபுரம், கரூர் பேருந்து நிலையம் அருகே கட்சியினர் வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார்.
பின்னர், மதியம் 12 மணிக்கு மாரி கவுண்டன்பாளையத்தில் நடக்கும் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று ராகுல்காந்தி பேசுகிறார். பின்னர், மதியம் 3 மணிக்கு, பள்ளப்பட்டி ஷா நகர் கார்னர் பகுதிகளில் மக்கள் வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார்.
பின்னர், திண்டுக்கல் மாவட்டத்துக்குச் சென்று அன்று மாலை 4.15 மணிக்கு, வேடசந்தூர், ஆத்துமேடு பகுதிகளில் கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார்.
பின்னர் அன்று மாலை 6 மணிக்கு மதுரைக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு ராகுல்காந்தி எம்.பி திரும்புகிறார். கட்சியினர் வரவேற்பு அளிக்கும் இடங்களில் ராகுல் சிறிது நேரம் பேசுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT