Published : 21 Jan 2021 06:19 PM
Last Updated : 21 Jan 2021 06:19 PM
இலங்கைக் கடற்படையின் ரோந்துப் படகு மூலம் இடித்து தமிழக மீனவர்கள் 4 பேரை மூழ்கடித்துக் கொன்ற இலங்கை கடற்படையினரைக் கண்டித்து ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தங்கச்சிமடத்தை சார்ந்த ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ராமேசுவரம் பகுதியைச் சார்ந்த மெசியா (30), நாகராஜ் (52), செந்தில்குமார் (32), சாம்சன் டார்வின் (28) ஆகிய நான்கு மீனவர்கள் ஜனவரி 18 திங்கட்கிழமை அன்று கடலுக்குச் சென்றனர்.
செவ்வாய்கிழமை அதிகாலை நெடுந்தீவு கடற்பகுதியில் 4 மீனவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து படகு மூலம் மீனவர்களின் விசைப்படகில் இடித்து மீனவர்களுடன் படகை மூழ்கடித்தது தெரியவந்தது.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் கோரிக்கையை ஏற்று இலங்கை கடற்படை மாயமான மீனவர்களை தேடி வந்தது. இதில் புதன்கிழமை மாலை 2 உடல்களும், வியாழக்கிழமை 2 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மீனவர்களின் உடல்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும், இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், இறந்த மீனவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைளை வலியுறுத்தி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் சேசுராஜ், போஸ், சகாயம் மற்றும் தங்கச்சிமடம், பாம்பன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT