Last Updated : 21 Jan, 2021 06:01 PM

 

Published : 21 Jan 2021 06:01 PM
Last Updated : 21 Jan 2021 06:01 PM

இலங்கைக் கடற்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக மீனவர்கள் உடலைக் கொண்டுவரக் கோரி சாலை மறியல்

ராமநாதபுரம்-தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட தாதனேந்தல் கிராம மக்கள்.  

ராமநாதபுரம்

இலங்கைக் கடற்படை தாக்கி உயிரிழந்த திருப்புல்லாணி மீனவரின் உடலை இந்தியா கொண்டு வந்து உடற்கூறு ஆய்வு செய்து, குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது கிராம மக்கள் கோரிக்கை விடுத்து கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா(30), உச்சிப்புளி வட்டவளத்தைச் சேர்ந்த நாகராஜ்(52), மண்டபத்தைச் சேர்ந்த சாம்சன்(28), திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(32) ஆகிய 4 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர்.

இம்மீனவர்கள் 19-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் இவர்களது படகை மோதி மூழ்கடித்து, மீனவர்களையும் தாக்கிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மீனவர்கள் செந்தில்குமார் மற்றும் சாம்சன் உடல்கள் இலங்கை காங்கேசன் துறை கடற்கரையில் ஒதுங்கியதாகவும், அதை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக யாழ்ப்பானம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் மீனவர் செந்தில்குமாரின் உடல் ஒதுங்கி 2 நாட்கள் ஆகியும், மத்திய,மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகத்திலிருந்து மீனவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூட கூறவில்லை எனக்கூறி தாதனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராமத் தலைவர் நாகசாமி, திருப்புல்லாணி ஒன்றிய மதிமுக செயலாளர் ரெத்தினகுமார் தலைமயைில் இன்று பகல் 12.20 மணியளவில் ராமநாதபுரம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் அவரது உடலை இந்தியா கொண்டு வந்து உடற்கூறு ஆய்வு செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணமும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதனையடுத்து கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ், ராமநாதபுரம் மீன்வள உதவி இயக்குநர்(தெற்கு) கோபிநாத், கீழக்கரை காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோர் பொதுமக்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

அதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் 1 கி.மீட்டருக்கு மேல் வாகனங்கள் நெரிசலில் சிக்கின.

சோகத்தில் மூழ்கிய கிராமம்:

மீனவர் செந்தில்குமார் இலங்கை கடற்படையினர் தாக்கி உயிரிழந்ததால் தாதனேந்தல் கிராமமே சோகத்தில் மூழ்கியது. செந்தில்குமாரின் தந்தை செல்லம் (72), தாயார், இந்திராணி (69), மனைவி அபினேஷ்வரி (30), மகன் உலகேஸ்வரன் (7) ஆகியோர் வீட்டில் கதறி அழுத வண்ணம் உள்ளனர்.

கார் ஓட்டுநராக இருந்த செந்தில்குமார், கரோனா தொற்று தொடங்கியதும் தொழில் இல்லாததால் கடந்த 10 மாதங்களாக மீன்பிடித் தொழில் செய்யச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x