Published : 21 Jan 2021 05:26 PM
Last Updated : 21 Jan 2021 05:26 PM
32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையிலான விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்ட அணி வெற்றி பெற்றது.
32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தினமும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி காமராஜ் கல்லூர் நாட்டு நலப்பணித் திட்டத்தின் 54, 56-வது அணிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி காமராஜ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து சிறிது நேரம் கிரிக்கெட் ஆடினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ், காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆ.தேவராஜ், பொன்னுத்தாய், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து கொண்டே விளையாடும் இந்த விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன. இரு அணிகளுக்கும் இடையே 12 ஓவர்களை கொண்ட 3 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 2 போட்டிகளில் வென்று ராமநாதபுரம் மாவட்ட அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கும், பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மகளிர் ஹெல்மெட் பேரணி:
தொடர்ந்து சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி மகளிர் மட்டுமே பங்கேற்ற இருச்சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பிருந்து எஸ்பி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு வரை நடைபெற்ற இந்த பேரணியில் பெண் காவலர்கள் உள்ளிட்ட சுமார் 50 பெண்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் டிஎஸ்பி கணேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விநாயகம் (தூத்துக்குடி), நெடுஞ்செழியபாண்டியன் (கோவில்பட்டி), காவல் ஆய்வாளர்கள் ஆனந்தராஜன், மயிலேறும் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT