Published : 21 Jan 2021 04:31 PM
Last Updated : 21 Jan 2021 04:31 PM
புதுச்சேரியில் ஆளுநர், முதல்வருக்காக சீரமைக்கப்பட்டு கொண்டிருந்த சாலை பணியை அதிமுக எம்எல்ஏ அன்பழகன் தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு விளையாட்டு திடலுக்கு செல்லும் வம்பாகீரப்பாளையம் மெயின்ரோட்டில் சேதமடைந்த சாலைகள் ‘பேட்ஜ் ஒர்க்’ மூலம் சீரமைக்கும் பணி இன்று(ஜன 21) மேற்கொள்ளப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் அப்பணியை தடுத்து நிறுத்தினார். மேலும் சாலை பணிக்காக குவிக்கப்பட்டிருந்த சிமென்ட் கலவைகளை தூக்கி எறிந்த அவர், அங்கிருந்து அதிகாரிகளிடம், ‘‘ மக்கள் வசிக்கும் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்காமல், இப்பகுதியில் சாலைகளை சீரமைக்கப்படக்கூடாது’’ என எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து சாலை செப்பனிடும் பணியை கைவிட்ட அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
இது குறித்து அன்பழகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘புதுச்சேரி காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு கடந்த 2 ஆண்டுகளாக எந்த ஒரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்கவில்லை. இதனால் தொகுதிகளில் பழுதான சாலைகளை செப்பனிட முடியவில்லை. இது சம்பந்தமாக அரசிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தினமும் முதல்வரும், ஆளுநரம் மாறி மாறி மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றார். இதனால் மக்கள் நலப்பணிகள் முடக்கப்பட்டு உள்ளது. இச்சூழலில் வரும் 26ம் தேதி குடியரசு தின விழாவுக்கு ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் செல்லும் சாலையை ‘பேட்ஜ் ஒர்க்’ மூலம் சீரமைக்க இன்று பணி மேற்கொண்டனர். இவ்வளவு நாட்களாக வராத அதிகாரிகள், ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் சொகுசு காரில் செல்வதற்காக ‘பேட்ஜ் ஒர்க்கை’ மேற்கொள்கின்றனர்.
முதலில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைத்துவிட்டு, பின்பு இங்குள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். மக்கள்தான் முக்கியம். ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் சுகமாக வாழ்வதற்கு அதிகாரம் இல்லை. புதுச்சேரி பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் அரசு செலவில் எந்த பணியும் செய்யக் கூடாது என்று சத்தியம் செய்து கடந்த ஓரா்ணடாக ஒரு வேலை கூட செய்யாமல் உள்ளார். பொதுப்பணித்துறையில் ஆண்டுக்கு ரூ.145 கோடி ஊதியம் போடப்படுகிறது.
ஆனால் ரூ.10 கோடிக்குக்கூட வேலை நடைபெறவில்லை.’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT